போர் கண்ட தேசத்தில் திரும்பவும் தேர் ஓடவேண்டும் என்றால் அந்த போருக்கும் தேருக்கும் இடையிலே இருக்கின்ற ஏரோடவேண்டும். வான் மழையை அறுவடைசெய்து அங்கே குளம் கட்டி குலதெய்வம் வைக்கும் நாகரீகம் வளர்த்தவர்கள் நம் தமிழர்கள் . அந்த நாகரீகம் ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கும அப்பாற்பட்டதென்று இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே விதை விதைக்கும் விழா என்பது நம் நாகரீகத்தின் முதுகெலும்பாக இருக்கின்றது என்று என்று ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தெரிவித்தார்.
ஓமந்தை ஆழப்படுத்திய அலைகல்லுப்போட்ட குளத்தினை கையளிக்கும் நிகழ்வு மற்றும் காலபோக விதைப்பு விழா ஆளுநர் அவர்கள் தலைமையில் 06 ஒக்ரோபர் 2019 அன்று காலை இடம்பெற்றது. இதன்போது ஆளுநர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
வவுனியா மாவட்ட கமக்காரர் ஒழுங்கமைப்புக்களின் சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இ;ந்த நிகழ்வில் கலந்துகொண்டு ஆளுநர் அவர்கள் இந்த குளத்தின் பயன்பாட்டினை பெற்றுக்கொள்ளும் விவசாயிகளின் விவசாய நிலத்தில் காலபோக நெற்பயிர்ச்செய்கையினை ஆரம்பித்து வைத்தார்.
மேலும் வவுனியா கமக்கார சம்மேளனம் ஆளுநர் அவர்களிடம் குளங்களை திருத்தி தருமாறு வைத்த கோரிக்கைக்கு அமைவாக வவுனியா மாவட்;ட செயலகம் மற்றும் கமநல அபிவிருத்தித்திணைக்களத்தின் ஊடாக இக்குளத்திற்காக அலைக்கல்லுபோட்ட குளத்தின் புனரமைப்பு வேலைத்திட்டங்கள் வடமாகாண ஆளுநரின் ஐந்து மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வில் கலந்துகொண்ட தெரிவுசெய்யப்பட்ட விவசாயிகள் சிலருக்கு ஆளுநர் அவர்களினால் பரிசில்கள் வழங்கப்பட்டன.