வவுனியா மாவட்டத்தில் CRIWMP திட்டத்தின் கீழ் 2020, சிறுபோகத்தில் நெல் மற்றும் மறு வயற் பயிர்களிற்கான விதை உற்பத்தி

உலகளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் பரவுகையினால் வெளிநாடுகளில் இருந்து உணவுப் பொருட்களினை இறக்குமதி செய்வது பாதிக்கப்படும் பட்சத்தில் நாட்டில் உணவப் பற்றாக்குறை ஏற்படலாமென எதிர்பார்க்கப்படுவதனால் அதனை எதிர்கொள்ளும் நோக்கில் வட மாகாண விவசாயத் திணைக்களத்தினால் UNDP நிறுவனத்தின் நிதி அனுசரணையுடன்; “CRIWMP” திட்டத்தின் கீழ் வவுனியா மாவட்டத்தில் 2020 சிறுபோகத்தில் உலுக்குளம், செட்டிக்குளம், கோவில்குளம், பம்பைமடு மற்றும் மடுக்கந்த விவசாயப் போதனாசிரியர் பிரிவுகளில் நெல் மற்றும் மறு வயற்பயிர்களிற்கான விதை உற்பத்தித் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

சிறுபோகம், 2020 இல் விதை நெல் 150 ஏக்கரிலும், பயறு 15 ஏக்கரிலும், உழுந்து 15 ஏக்கரிலும், கௌப்பி 10 ஏக்கரிலும் விதை உற்பத்திக்காகப் பயிரிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது. இதற்காகப் பதிவு செய்யப்பட்ட விதைகள் பிரதி விவசாயப் பணிப்பாளர், விதைகள் மற்றும் நடுகைப் பொருள் அபிவிருத்தி நிலையத்திலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்டு வவுனியா மாவட்ட விவசாயிகளிற்கு விநியோகிக்கப்பட்டுள்ளது. தற்போது பயிர்கள் ஸ்தாபிக்கப்பட்டு 1- 2 வாரப் பருவத்தில் காணப்படுகின்றன.

மேலும் விதை உற்பத்திக்காக 160 ஏக்கரில் நிலக்கடலை பயிரிடத் தீர்மானிக்கப்பட்டிருந்தது. அதற்கான பதிவு செய்யப்பட்ட விதைகளினைப் பெற்றுக் கொள்வதில் ஏற்பட்ட நெருக்கடியினால் ஆரம்ப கட்டமாக 2,000 கி.கி. அத்தாட்சிப்படுத்தப்பட்ட விதைகள் பெறப்பட்டு விவசாயிகளிற்கு விநியோகிக்கப்பட்டுள்ளது.

2020/21 பெரும்போகத்திற்கு தேவையான மாவட்டத்தின் விதைத் தேவையை பூர்த்தி செய்வதுடன் தரமான விதைகளை உற்பத்தி செய்வதே இவ் விதை உற்பத்தித் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். விவசாயிகள் விதை உற்பத்;தியில் ஈடுபடுவதை ஊக்குவிக்கும் முகமாக பயனாளிகளுக்கு விதைகள் இலவசமாக வழங்கி வைக்கப்பட்டது.

இவ் விதையுற்பத்தியினூடாக 15,000 புசல் விதை நெல், 2,500 கி.கி. கௌபி, 4,500 கி.கி. பயறு, 5,000 கி.கி. உழுந்து ஆகியவற்றை உற்பத்தி செய்வதற்கு எதிர்பார்க்கப்படடுள்ளது. மாகாண விவசாயத் திணைக்களத்தின் வழிகாட்டலின் கீழ், விதையுற்பத்திக்கான பதிவினை விவசாயிகள் உரிய நடைமுறைகளினை உரிய காலப் பகுதியில் பின்பற்றிப் பதிவு செய்து உற்பத்தி செய்யப்படும் விதைகளினை, விதைகள் மற்றும் நடுகைப்பொருட்கள் அபிவிருத்தி நிலையத்தினால் கொள்வனவு செய்யப்பட்டு, அடுத்து வரும் போகத்தில் விதைத் தேவைக்காக விவசாயிகளுக்கு விநியோகிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.