வவுனியா மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் வீதி அபிவிருத்திப் பணிகளை ஆளுநர் நேரில் பார்வையிட்டார்

வடக்கு மாகாண வீதி அபிவிருத்தித் திணைக்களத்தால் வவுனியா மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் வீதி மற்றும் பாலம் அமைக்கும் பணிகளின் முன்னேற்றத்தை வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் மற்றும் கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் ஆகியோர் இன்று (15.09.2026) செவ்வாய்க்கிழமை நேரில் சென்று பார்வையிட்டனர்.

இதன்போது, நெடுங்கேணி–கூளாங்குளம் வீதியின் 1.86 கிலோமீற்றர் பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் பாலம் மற்றும் பிரமணாலங்குளம்–பரப்புக்கடந்தான் வீதியின் 5.55 கிலோமீற்றர் பகுதியில் 200 மீற்றர் நீளமான கொங்கிறீட் வீதியும் ஆற்றுச்சருக்கையும் அமைக்கும் பணிகள் ஆகியன பார்வையிடப்பட்டன.

நெடுங்கேணி–கூளாங்குளம் வீதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் பாலம் 65 மில்லியன் ரூபா மதிப்பீட்டில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அத்துடன் வீதியும் குறித்த பகுதியில் அகலிக்கப்பட்டு புனரமைக்கப்படவுள்ளது. இவ்வேலைத்திட்டம் டித்வா மீள்கட்டுமான நிதி மூலம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

அதேவேளை, பிரமணாலங்குளம்–பரப்புக்கடந்தான் வீதியின் 5.55 கிலோமீற்றர் பகுதியில் 200 மீற்றர் நீளமான கொங்கிறீட் வீதியுடன் கூடிய ஆற்றுச்சருக்கை அமைக்கும் பணி, 40 மில்லியன் ரூபா செலவில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இவ்வேலைத்திட்டம் மாகாணக் குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை நிதி மூலம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

இரு இடங்களையும் நேரில் பார்வையிட்ட ஆளுநர், அபிவிருத்திப் பணிகள் சிறப்பாகவும் வேகமாகவும் முன்னெடுக்கப்பட்டு வருவதை அவதானித்ததுடன், பணியாளர்களை ஊக்கப்படுத்தி, அவர்களின் அர்ப்பணிப்பான பணிகளுக்குப் பாராட்டுத் தெரிவித்தார். மக்கள் பயன்பெறும் வகையில் பணிகளின் தரத்தையும் காலக்கெடுவையும் பேணுவது அவசியம் எனவும் வலியுறுத்தினார்.

வவுனியா மாவட்ட மக்களின் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தும் வகையில் முன்னெடுக்கப்படும் இத்தகைய வீதி மற்றும் பாலம் அபிவிருத்திப் பணிகள், மழைக்காலங்களில் ஏற்படும் போக்குவரத்து சிரமங்களைக் குறைப்பதுடன், பிரதேசங்களுக்கிடையிலான இணைப்பையும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்விடப் பார்வையின்போது, வடக்கு மாகாண வீதி அபிவிருத்தித் திணைக்களத்தின் பிரதம பொறியியலாளர் அலுவலகத்தின் பிரதம பொறியியலாளர் கே.கௌசிகன் மற்றும் குறித்த வேலைத்திட்டங்களின் ஒப்பந்தகாரர்களும் கலந்து கொண்டனர்.