வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் ஊராட்சி முற்றக்கூட்டங்கள் இடம்பெற்றன

மார்ச் 1, 2024 அன்று, வவுனியா மற்றும் முல்லைத்தீவில் உள்ள மாவட்டச் செயலகங்களில் தனித்தனியாக இரண்டு ஊராட்சி முற்றக் (Town Hall) கூட்டங்கள் நடைபெற்றன. பெண்களைப் பாதிக்கும் பிரச்சனைகள் குறித்து சிறப்பு கவனம் செலுத்தி, உள்ளுர் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்காக அரச அதிகாரிகள், சமூக உறுப்பினர்கள் மற்றும் ஆர்வலர்களை ஒன்றிணைத்து, மகளிர் விவகார அமைச்சு, வடக்கு மாகாண சபை மற்றும் அந்தந்த மாவட்ட செயலகங்களின் இணைத் தலைமையில் இக்கூட்டங்கள் நடாத்தப்பட்டன.

வவுனியாவில் நடைபெற்ற கூட்டம் வடக்கு மாகாண சபை மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் திரு.பொ.வாகீசன் அவர்கள் மற்றும் வவுனியா மாவட்ட செயலாளர் திரு.P.A.சரத்சந்திர அவர்களின் இணைத் தலைமையிலும் நடைபெற்றது. முல்லைத்தீவில் நடைபெற்ற கூட்டம் வடக்கு மாகாண சபை மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் திரு.பொ.வாகீசன் அவர்கள் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட மேலதிக செயலாளர் திரு.எஸ்.குணபாலன் அவர்களின் இணைத் தலைமையிலும் நடைபெற்றது.

மதிப்பிற்குரிய முன்னாள் அரசாங்க அதிகாரியான திரு.செல்வின் இரேனியஸ் அவர்கள் ஆக்கபூர்வமான கலந்துரையாடல்களை நடாத்துவதற்குக் களம் அமைத்துக் கொடுத்தார்.

Chrysalis இன் செயற்திட்ட முகாமையாளர் திரு. எம். பிரபாகரன், சமூக பொருளாதார வளர்ச்சியில் பொதுமக்களின் ஈடுபாட்டிற்கானதும், சமூக சவால்களை எதிர்கொள்வதற்கானதுமான ஒரு செயலூக்கமான தளமாக ஊராட்சி முற்றக் கூட்டங்கள் முக்கிய பங்காற்றுவதைத் தெளிவாக வலியுறுத்தினார். எதிர்காலத்தில் நடைபெறவுள்ள இவ்வாறான ஊராட்சி முற்றக் கூட்டங்களுக்கென முன்மொழியப்பட்ட ஒரு நியம செயற்திட்ட நடைமுறையை (Standard Operating Procedure) அறிமுகப்படுத்திய அவர், அந்நியம செயற்திட்ட நடைமுறை தொடர்ந்தும் பரிணமித்து வருவதால் அதற்கான பரிந்துரைகளை வரவேற்றார். அடுத்து நடைபெறவுள்ள கூட்டங்களில், தற்பொழுது கலந்துரையாடப்பட்ட விடயங்களின் பின்னூட்டல் நடவடிக்கைகள் இற்றைப்படுத்தப்பட வேண்டும் என்ற தீர்மானத்துடன் கூட்டம் நிறைவுற்றது.

இலங்கையின் வடக்கு மாகாணத்தில், ஐரோப்பிய ஒன்றியத்தால் நிதியளிக்கப்பட்ட, ‘பெண்கள் தலைமையிலான ஒன்றிணைந்த மன்றங்களின் ஊடாக அமைதி மற்றும் உள்ளடங்கலான தாங்குதிறன் மிக்க சமூகங்களை மேம்படுத்தல் (BRIDGE)” எனும் திட்டத்தின் கீழ் Chrysalis இன் சிறப்பான ஆதரவுடன், பயனுள்ள இந்த ஊராட்சி முற்றக் கூட்டங்கள் சாத்தியமாக்கப்பட்டன.