யாழ் வலிகாகம் வடக்கு பிரதேசத்தில் பாதுகாப்பு படைகளின் வசமுள்ள பொதுமக்களின் காணிகளில் 27.5 ஏக்கர் காணிகள் பொதுமக்களுக்கு மீண்டும் கையளிக்கும் நிகழ்வு கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களின் தலைமையில் 12 யூலை 2019 அன்று முற்பகல் தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
யுத்தகாலத்தில் பாதுகாப்பு படையினரால் கையகப்படுத்தப்பட்ட பொதுமக்களின் காணிகளை மீண்டும் அவர்களிடமே கையளிக்க வேண்டுமென்ற ஜனாதிபதி கௌரவ மைத்திரிபால சிறிசேன அவர்களின் எண்ணக்கருவுக்கமைய யாழ். மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி அவர்களின் ஒத்துழைப்போடு விடுவிக்கப்படும் குறித்த காணிகள் கௌரவ ஆளுநர் அவர்களிடம் கையளிக்கப்பட்டதுடன் கௌரவ ஆளுநர் அதனை யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு முரளிதரன் அவர்களிடம் வழங்கினார்.
2015 ஆண்டுமுதல் இன்றுவரை யாழ் மாவட்டத்தில் பாதுகாப்பு படைகளின் வசமிருந்த காணிகளில் 2963 ஏக்கர் காணிகள் பொதுமக்களிடம் மீண்டும் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் மேலும் பல காணிகள் படிப்படியாக விடுவிக்கப்படவுள்ளமையை குறிப்பிட்ட கௌரவ ஆளுநர் அவர்கள், அதற்கான செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இதன்போது தெரிவித்தார்.




