வருடாந்த அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல்

வடக்கு மாகாண அமைச்சுக்கள் மற்றம் திணைக்களங்களின் அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் அவற்றின் நிதி ஒதுக்கீடுகள் தொடர்பான கலந்துரையாடல் வடமாகாண ஆளுநர் கௌரவ திருமதி பி.எஸ்.எம். சாள்ஸ் அவர்களின் தலைமையில் வடமாகாண சுகாதார திணைக்கள மாநாட்டு மண்டபத்தில் 15 மார்ச் 2021 அன்று காலை 9.30 மணிக்கு இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில் அமைச்சரவை செயலாளர், பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர், வட மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், ஆளுநரின் இணைப்பு செயலாளர், மற்றும் அனைத்து திணைக்களம் சார்ந்த தலைவர்களும் கலந்துகொண்டிருந்தனர். குறித்த கலந்துரையாடலில் வீட்டுத்திட்ட அபிவிருத்தி, உட்கட்டமைப்பு, விவசாயம், கல்வி, சுகாதாரம், மற்றும் கிராமிய அபிவிருத்தி உள்ளிட்ட அனைத்து துறையினதும் துறைரீதியான திட்டங்கள் மற்றும் அவற்றிற்கு தேவையான நிதி ஒதுக்கீடுகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது. இங்கு கருத்து தெரிவித்த கௌரவ ஆளுநர் அவர்கள், சுற்றுலாத்துறை அபிவிருத்தி தொடர்பில் கருத்து தெரிவிக்கையில் கொவிட் -19 தொற்றிடர் காரணமாக கடந்த பல மாதங்களாக சுற்றுலாத்துறை வீழ்ச்சி நிலையில் காணப்படுகின்றது. இந்நிலையில் புதிய திட்டங்களை ஆரம்பிப்பதனை விடுத்து ஏற்கனவே உள்ள கவர்ச்சிகரமான சுற்றுலாத்துறை இடங்களை இனங்கண்டு அவற்றை அபிவிருத்தி செய்யவும், அதேபோன்று வீதி அபிவிருத்திகளை மேற்கொள்ளவும் ஆலோசனை தெரிவித்தார்.
மேலும் அரசினால் பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக நிதி ஒதுக்கீடுகள் வழங்கப்படுகின்ற போதிலும் முறையான தீர்வுக் கொள்கை கடைப்பிடிக்கப்படுவதில்லை என்பது முக்கிய குறைபாடும். அதாவது மக்களின் நிரந்தர வதிவிடம் ஓரிடத்திலும் அவர்களின் வாழ்வாதார செயற்பாடுகள் இன்னொரு இடத்திலும் செயற்படுத்தப்படுவதால் பல்வேறு இடங்களில் முறைபாடுகள் காணப்படுகின்றமையை அவதானிக்க முடிகின்றது. இதனால் முதலீட்டு செலவு குறைவாக காணப்படுகின்றது.
மேலும், கல்வி, மற்றும் சுகாதார துறைகளை பொறுத்தவரை கிராமப்புற பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுகின்றது. பாடசாலைகளில் மாணவர்களுக்கான முறையான மலசலகூட பற்றாக்குறை மற்றும் கிராமப்புற வைத்தியசாலைகளில் வைத்தியர்கள் மற்றும் தாதியர்கள் பற்றாகுறை போன்ற பிரச்சனைகள் காணப்படுகின்றன. இத்துறைகளை மட்டுமன்றி அனைத்து அரச நிறுவனங்களிலும் காணப்படுகின்றமையை குறித்த கிராமப்புறங்களிற்கு சென்றிருந்தபோது அவதானிக்க முடிந்ததாக தெரிவித்த கௌரவ ஆளுநர் அவர்கள், இக்குறித்த திட்டங்களில் காணப்படும் தேவைப்பாடுகளை மீள சரிபார்த்து அதற்கு தேவையான மேலதிக தேவைபாட்டு திட்டங்களை உள்ளடக்குவதற்க்கும் அனைத்து துறைசார் தலைவர்களுக்கும் ஆலோசனை தெரிவித்தார்.