வயல் விழா – உருத்திரபுரம் நெல் உற்பத்தித்திறனை அதிகரிக்கும் நோக்குடனான “யாய” முன்மாதிரி கண்ட நெற்செய்கை

மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியம் – 2026 இன் நிதிப் பங்களிப்புடன் பிரதி விவசாயப் பணிப்பாளர் அலுவலகம், கிளிநொச்சியின் உருத்திரபுரம் விவசாயப் போதனாசிரியர் பிரிவிற்கு உட்பட்ட உருத்திரபுரம் குளம் சிறிய நீர்ப்பாசன குளத்தின் கீழான மாதாபுரி (சுவாமி கமம்) சிவன் வீதி உருத்திரபுரம் முகவரியில் உள்ள வயற் துண்டத்தில் நெற்செய்கையில் உற்பத்தித்திறனை அதிகரிக்கும் நோக்குடன் ஸ்தாபிக்கப்பட்ட 50 ஏக்கர் விஸ்தீரணம் உள்ள “யாய” கண்ட முன்மாதிரித்துண்ட வயல் விழா 14.08.2026 அன்று காலை 10.00 மணியளவில் பிரதேச விவசாயப் போதனாசிரியர் திரு.நா.மகராஜன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக திரு.ஸ்ரீ.ராஜேஸ்கண்ணா, மேலதிக பணிப்பாளர், பிராந்திய விவசாய ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையம், கிளிநொச்சி அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக திரு.இ.சஞ்சீவன், பிரதி விவசாயப் பணிப்பாளர், விதைகள் மற்றும் நடுகைப்பொருள் அபிவிருத்தி நிலையம், கிளிநொச்சி, திருமதி.நி.பமித்திரா, பிரதி விவசாயப் பணிப்பாளர் (ஆராய்ச்சி), நெல் ஆராய்ச்சி நிலையம், கிளிநொச்சி அவர்களுடன் திருமதி.சோ.விஜயதாசன் பிரதி விவசாயப் பணிப்பாளர் (விரிவாக்கம்) கிளிநொச்சி அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

குறித்த வயற்துண்டத்தில் சிறப்பு பயிராக்கவியல் செயற்பாடுகளை மேற்கொண்டு பிஜி– 307 இன நெல் வர்க்கமானது பயிரிடப்பட்டது. இவ் கண்டத்தில் சராசரியாக 4.3mt/ha எனும் விளைவை பெற்று வந்த நிலையில் வேறுபட்ட அதிகரித்த இரசாயன பசளை சிபாரிசிற்கு அமைவாக அவ் வயற்துண்டத்தில் இருந்து 3 வருடத்தில் 6mt/ha எனும் விளைவை நோக்கியே இவ் “யாய” முன்மாதிரி கண்ட நெற்செய்கையானது ஸ்தாபிக்கப்பட்டது.
உற்பத்திதிறனை அதிகரிக்கும் “யாய” நெற்செய்கை தொடர்பான விளக்கத்தினை திருமதி.ரூ.ஸ்ரீரூபி பாட விடய உத்தியோகத்தர் (நெல்) அவர்களும், பயிர்க் காப்புறுதி மற்றும் விவசாயிகள் ஓய்வூதியம் தொடர்பான தெளிவூட்டலை திரு.ப.பிரதீப், வெளிக்கள உத்தியேதகத்தர், கமத்தொழில் மற்றும் கமநல காப்புறுதி சபை, கிளிநொச்சி அவர்களும் தொடர்ந்து “EL-Nino” வினால் சவாலாகும் விவசாயமும் உணவு உற்பத்தியும் எனும் தொனிப்பொருளிலான சிறப்பு கருத்து பகிர்வினை பிரதம விருந்தினர் அவர்களும் வழங்கி நிகழ்வினை சிறப்பித்தனர்.

மேலும் நெல்லின் உற்பத்திதிறனை அதிகரிக்கும் நோக்குடன் நவீன முறையில் நெற் செய்கையில் ஈடுபட்ட தெரிவு செய்யப்பட்ட விவசாயிகளை ஊக்குவிக்குமுகமாக மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியம் 2026 இன் ஊடாக காசோலைகளும் வழங்கி வைக்கப்பட்டன.

மேலும் இவ் வயல் விழாவில் உதவி விவசாயப் பணிப்பாளர் நெல் ஆராய்ச்சி நிலையம் பரந்தன், கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் உருத்திரபுரம், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் உருத்திரபுரம் வடக்கு, பாட விடய உத்தியோகத்தர்கள், விவசாயப் போதனாசிரியர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள், அரச உத்தியோகத்தர்கள், கமக்கார அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் பொது மக்கள் என பலரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.