வயல் நிலங்களில் மறுவயற்பயிர்செய்கை அறுவடை வயல் விழா

மன்னார் மாவட்டத்தின் உயிலங்குளம் விவசாயப்போதனாசிரியர் பிரிவில் தேத்தாவடி கிராமத்தில் வயல் நிலங்களில் மறுவயற்பயிர்செய்கை அறுவடை வயல்விழா திரு.நா.கிருஸ்ணமூர்த்தி எனும் விவசாயியின் வயல்நிலத்தில் 01.07.2025 இன்று நடைபெற்றது. இவ்வயல் விழாவை உயிலங்குளம் விவசாயப்போதனாசிரியர் திருமதி. காயத்திரி கிசோபன் தலைமை தாங்கி நடத்தினார்.

இவ்வயல் விழாவின் விருந்தினர்களாக பிரதி விவசாயப்பணிப்பாளர் திருமதி பிரியதர்சினி றமணேந்திரன் உதவி விவசாயப்பணிப்பாளர் திரு.ஜே.மேர்வின் றொசான் றோச் பாடவிடய உத்தியோகத்தர்கள், விவசாயப் போதனாசிரியர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள், விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவியாளர்கள் மற்றும் விவசாயிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
விவசாயப் போதனாசிரியர் கருத்து தெரிவிக்கையில் எமது நாட்டில் தலா ஒரு நபரின் பயறு நுகர்ச்சி தேவையானது 12-14மkg ஆக காணப்படுகின்ற போதிலும் தற்போது எமது நாட்டின் உற்பத்தியானது தலா ஒரு நபருக்குரிய நுகர்ச்சி தேவையின் 20% மாத்திரமே நிவர்த்தி செய்யக்கூடியதாக உள்ளது. எனவே இந்நிலையை கருத்தில் கொண்டு எதிர்வரும் காலங்களில் ஏனைய விவசாயிகளும் பயறு செய்கையை அதிகளவு விஸ்தீரணத்தில் பயிர் செய்ய முன்வர வேண்டும். அத்துடன் வயல் நிலங்களில் பயறு செய்கை செய்வதன் மூலம் வளிமண்டல நைதரசன் நிலத்தில் பதிக்கப்பட்டு மண் வளம் திருத்தியமைக்கப்படுவதுடன் மேலதிக வருமானத்தையும் ஈட்ட முடியும் எனவும் கூறினார்.

வயல் நிலங்களில் மறுவயற்பயிராக செய்கை பண்ணப்பட்ட 2ac பயறுச்செய்கை பார்வையிடப்பட்டு வயல் நிலங்களில் பயறு செய்கை தொடர்பான பயிராக்கவியல் நடைமுறைகள் , நீர்முகாமைத்துவம் , உற்பத்தி செலவு போன்றவிடயங்களை பாட விடய உத்தியோகத்தர் (மறுவயற்பயிர்கள்) திரு.A.J.மார்க் விளக்கிக்கூறியதுடன் PSDG திட்டத்தின் கீழ் வயல் நிலங்களில் பயறு செய்கைக்காக எமது திணைக்களத்தால் உயிலங்குளம் வி.போ.பிரிவில் இவ்வருடம் 132ac இல் செய்கை பண்ணுவதற்காக விதைப்பயறு மானியமாக வழங்கப்பட்டுள்ளதாகவும் இதனை பயன்படுத்தி சிறப்பான முறையில் இவ்வயல் துண்டம் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் இவ்விவசாயியை பின்பற்றி ஏனைய விவசாயிகளும் பயறு செய்கையில் ஈடுபடும் போது நாட்டின் உற்பத்தியை அதிகரித்து மக்களின் நுகர்ச்சித்தேவையை நிவர்த்தி செய்து இறக்குமதியை குறைக்க முடியும். இதனால் விவசாயிகளின் வருமானம் அதிகரித்து வாழ்க்கைத்தரம் மேம்படுவதோடு நாட்டின் அந்நிய செலாவணியை மீதப்படுத்த முடியும். எனவும் தெரிவித்தார்.

தொடர்ந்து பாடவிதான உத்தியோகத்தர் (பயிர்பாதுகாப்பு) திரு.க.மதன்ராஜ் குலாஸ் அவர்கள் கருத்து தெரிவிக்கையில் ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் வயல் நிலங்களில் பயறு செய்கைக்கான சிறந்த வாய்ப்புக்கள் மன்னார் மாவட்டத்தில் காணப்படுகின்ற போதிலும் விவசாயிகள் உரிய பயிர்ச்செய்கை சிபாரிசுகளைப் பின்பற்றாமையானது கடந்த காலங்களுடன் ஒப்பிடும் போது தற்போது பயறு செய்கை விஸ்தீரணம் குறைவடைந்து செல்கின்றமைக்கு பிரதான காரணமாகும். எனவே வயல் நிலஙகளில் பயறுச்செய்கையை மேற் கொள்ளும் போது உரிய நீர் வடிப்பு வசதிகளை ஏற்படுத்தி கொள்வதுடன் சிறப்பான நிலப்பண்படுத்தலை மேற்கொண்டு பயிர்ச்செய்கையை ஆரம்பிப்பதுடன் அவ்வப்போது பயிர்ச்செய்கையில் ஏற்ப்படும் நோய், பீடைத்தாக்கங்களை உரிய முறையில் இனங்கண்டு அல்லது விவசாய போதனாசிரியரின் ஆலோசனையைப்பெற்று சிபாரிசு செய்யப்பட்;ட கட்டுப்பாட்டு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். அத்துடன் அளவுக்கதிகமான இரசாயன பாவனையையும், தேவையற்ற இரசாயன பாவனையையும் தவிர்த்து கொள்வதன் மூலம் பயறுச்செய்கையின் உற்பத்தி செலவை குறைத்து வருமானத்தை அதிகரித்து கொள்ள முடியும். எனவும் கூறினார்.

தொடர்ந்து பிரதி விவசாயப்பணிப்பாளர் கருத்து தெரிவிக்கையில் வயல் நிலங்களில் பயிர் மாற்றீட்டுத்திட்டத்தின் கீழ் பயிர்ச்செய்கை மேற்கொள்ளும் போது பயறுச்செய்கையில் மாத்திரம் தங்கியிருக்காது ஏனைய அவரை குடும்ப பயிர்களான கௌப்பி உளுந்து போன்ற பயிர்களையும் எதிர்காலத்தில் பயிர் செய்வதன் மூலம் உற்பத்திகளில் ஏற்படும் விலைத்தளம்பல்களில் இருந்து பாதுகாத்துக்கொள்ளமுடியும். அத்துடன் வயல் நிலங்களில் பூசணி, வத்தகை மற்றும் சிறு தானிய பயிர்களையும் செய்கை செய்வதன் மூலம் அதிகளவு வருமானத்தை ஈட்ட முடியும். எனவே இதனை கருத்தில் கொண்டு எதிர்காலத்தில் இது போன்ற பயிர்களை செய்கை மேற்கொள்ள விவசாயிகள் முன்வர வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

இறுதியில் தேத்தாவாடி விவசாய அமைப்பு தலைவரின் நன்றியுரையுடன் வயல் விழா இனிதே நிறைவு பெற்றது.