மன்னார் மாவட்டம் இரணை இலுப்பைக் குளம் மற்றும் காக்கையன் குள விவசாயப் போதனாசிரியர் பிரிவுகளின் விவசாயிகளுடனான கலந்துரையாடல் மன்னார் மாவட்ட பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் அப்துல் சுகூறு தலைமையில் இரணை இலுப்பைக்குளம் கமநல கேந்திர நிலையத்தில் 17.11.2020 ஆம் திகதி நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர் திரு.அ.சிவபாலசுந்தரன், வடக்கு மாகாண விவசாயப் பணிப்பாளார் திரு.சி.சிவகுமார் ஆகியோர் கலந்து கொண்டு விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக கேட்டறிந்து கொண்டதுடன் பிரிவிற்குரிய விவசாயப் போதனாசிரியர்கள் மூலம் தேவையான தொழில்நுட்ப உதவிகளைப் பெற்றுக்கொள்ளுமாறும் விவசாயம் சார்ந்த ஏனைய தேவைகளை பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும் எனவும் குறிப்பிட்டார்கள்.
விவசாயிகளுடனான கலந்துரையாடலைத் தொடர்ந்து இரணை இலுப்பைக்குளம் விவசாயப் போதனாசிரியர் பிரிவில் சிறந்தமுறையில் வீட்டுத் தோட்டப் பயிர்ச்செய்கையை மேற்கொள்ளும் இடங்களுக்கான களவிஜயம் மேற்கொள்ளப்பட்டு அவர்களை ஊக்குவிப்பதற்குரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து காக்கையன் குள விவசாயப் போதனாசிரியர் பிரிவில் பாரியளவில் மேற்கொள்ளப்படும் கோவா, போஞ்சி மற்றும் மிளகாய் பயிரச்செய்கைகளைப் பார்வையிடப்பட்டதுடன், அங்கு கோவா அறுவடை வயல் விழாவினை விவசாய அமைச்சின் செயலாளர் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
இரணை இலுப்பைக் குளம் பிரிவின் விவசாயப் போதனாசிரியர் திரு.ஜெ.கிரிசாந்தன் மற்றும் காக்கையன் குளம் பிரிவுக்குரிய விவசாயப் போதனாசிரியர் திரு.ஆர்.எஸ்.அசீகரன் ஆகியோரது செயற்பாடுகள் தொடர்பாக விவசாயிகள் தமது பாராட்டுக்களைத் தெரிவித்ததுடன் அவர்களது ஊக்குவிப்புக்களாலும் தொழில்நுட்ப வழிகாட்டல்களினாலும் தான், தாங்கள் விவசாயத் துறையில் இலாபமீட்டக் கூடியதாக உள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தனர்.