சிலோன் வெஜி ரெக் நிறுவனத்திற்கும் Ceylon Vege Tech (Pvt) Ltd இற்கும் வடமாகாண கௌரவ ஆளுநர் திருமதி P. S. M. சார்ள்ஸ் அவர்களுக்குமிடையில் புதிய வகை மிளகாய் பயிற்செய்கையை ஊக்குவித்தல் தொடர்பான கலந்துரையாடல் கௌரவ ஆளுநர் அவர்களின் தiலமையில் ஆளுநர் செயலகத்தில் 20 நவம்பர் 2020 அன்று காலை 9.30 மணிக்கு இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில் பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர், இணைப்பு செயலாளர், விவசாய அமைச்சின் செயலாளர், வட மாகாண விவசாயத்துறை பணிப்பாளர், யாழ் மாவட்ட பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரி, மற்றும் சிலோன் வெஜி ரெக் அதிகாரிகளும் உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது சிலோன் வெஜி ரெக் நிறுவனத்துடைய கட்டமைப்பு, அதில் உள்ள அங்கத்தவர்கள் விபரம், அவர்கள் பணியாற்றும் முறை, அவர்களுடைய இலக்கு மற்றும் அவர்கள் வட மாகாணத்தில் முன்னெடுக்கவுள்ள திட்டங்கள் பற்றி சிலோன் வெஜி ரெக் நிறுவன பிரதிநிதிகளால் எடுத்துரைக்கப்பட்டது.
இங்கு கருத்து தெரிவித்த கௌரவ ஆளுநர் அவர்கள் மிளகாய் சாகுபடியினுடைய முக்கியத்துவத்தையும், இலங்கை பொருளாதாரத்தில் அதன் செல்வாக்கையும் சுட்டி காட்டியதோடு நவீன தொழில்நுட்பத்தோடு செய்யப்படும் விவசாய செய்கைகள், தான் வரவேற்பதாக தெரிவித்தார் மேலும் குறித்த மிளகாய் செய்கையை மேற்கொள்வதற்குரிய இடங்களை அடையாளப்படுத்தி அங்குள்ள விவசாயிகளுக்கு அதுபற்றிய ஒரு சிறந்த விளக்கத்தை வழங்கி உள்வாங்கும் படியும் அறிவுறுத்தினார்.
மேலும் திட்டம் சார்ந்த செயற்திட்ட அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறும், அவ் அறிக்கையில் மிளகாய் பயிரிடும் விவசாயிகள் எவ்வாறு பயிரிடுகிறார்கள், அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், அவர்களுடைய எதிர்பார்ப்புகள் மற்றும் அவர்களை முன்னேற்றுவதற்கு உங்களது திட்டங்கள் என்பவற்றை தெளிவாக உள்ளடக்குமாறும் மிளகாய் பயிரிடுவதற்கான காலம் நெருங்கி வருவதால் உடனடியாக இவற்றை செய்யுமாறும் அறிவுறுத்தல் வழங்கினார்.