வடமாகாணத்திற்கு உட்பட்ட பாடசாலைகளுக்கான ஆங்கில ஆசிரியர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வும்இ வடமாகாண விவசாய அமைச்சுக்கு கீழான விவசாய போதனாசிரியர்இ விவசாய தொழில்நுட்பவியலாளர்களுக்கான நியமன கடிதங்கள் வழங்கும் நிகழ்வும் யாழ்பாணம் மத்திய கல்லூரி ‘தந்தை செல்வா’ மண்டபத்தில் 22 மார்ச் 2021 அன்று 9 மணிக்கு இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கௌரவ விருந்தினராக வடமாகாண ஆளுநர் கௌரவ திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்கள் கலந்து கொண்டார். அத்துடன் வடமாகாண பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர், வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர், கல்வித்துறையின் மாகாண பணிப்பாளர், மகளிர் விவகார அமைச்சின் செயலாளர், துறைசார் அதிகாரிகள் மற்றும் புதிதாக நியமனம் பெறுவோரும் கலந்து கொண்டிருந்தனர்.
இங்கு கருத்து தெரிவித்த கௌரவ ஆளுநர் அவர்கள் மேன்மை தங்கிய ஜனாதிபதி தந்த விசேட அதிகாரத்தின் மூலம் மாகாண சபையில் காணப்படும் வெற்றிடங்களை நிரப்பி வருவதாகவும் அச்செயற்பாட்டின் ஒரு கட்டமாகத்தான் இன்றைய நியமனங்கள் வழங்கப்படுவதாகவும் குறிப்பிட்டார்.
அத்துடன் முதன் முறையாக டிப்ளோமா பட்டதாரிகள் ஆங்கில ஆசிரியர்களாக வடமாகணத்தில் இணைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். ஆங்கில, கணித, விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப ஆசிரியர்களுடைய ஆளணி பற்றாக்குறை வடமாகாண கல்வி தரத்திலும் கல்வி நிலையிலும் பாரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக கூறிய கௌரவ ஆளுநர் அவர்கள் அதனை நிவர்த்தி செய்யும் முதல் படியாக இந்த ஆங்கில ஆசிரியர் நியமனம் அமையும் என நம்பிக்கை வெளியிட்டார். மேலும் இனிவரும் காலங்களில் அத்தனை கிராமப்புற பாடசாலைகளிலும் ஆங்கிலம், கணிதம், விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப ஆசிரியர்கள் தேவைக்கு ஏற்ப தகுதிகளின் அடிப்படையில் நியமிக்கபடவுள்ளதால் கல்வி சார் செயற்பாடுகள் சரியாக புகட்டப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார். அத்துடன் மாணவர்கள் பல்கலைகழகங்கள் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிகளில் அந்தந்த துறைகளில் பயிற்றுவிக்கப்பட வேண்டும் எனவும் சர்வதேச தரத்திலான கல்வியை மாணவர்கள் பெற்றுகொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
அடுத்ததாக விவசாய மற்றும் கால்நடை துறையில் புதிதாக நியமனம் பெறுவோர் பற்றி கருத்து தெரிவித்த கௌரவ ஆளுநர் அவர்கள் இலங்கையில் பாரம்பரிய முறையிலான உற்பத்தி முறைகளே தற்போதும் காணப்பட்டு வருவதால் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் உற்பத்தி விலை அதிகமாக காணப்படுகிறது அதுவே பொருட்கள் இறக்குமதி செய்யக் காரணமாகிறது எனவும் சுட்டிக்காட்டினர். மேலும் இந்த நிலையை மாற்றி நவீன தொழில்நுட்ப முறைகளை விவசாயிகள் மற்றும் கால்நடை உற்பத்தியாளர்களுக்கு பயிற்றுவித்து நவீன தொழில்நுட்ப முறைகளின் மூலம் உற்பத்தி செலவை குறைத்து உற்பத்தி துறையிலே ஒரு புதிய புரட்சியை கொண்டுவர வேண்டும் எனும் நோக்கத்துடன் தான் இந்த நியமனங்கள் வழங்கபடுவதாகவும் குறிப்பிட்டார்.
மேலும் பதவி நிலை சார் உத்தியோகத்தர்கள் வெகு விரைவாக நியமிக்கப்படுவார்கள் என விவசாயத்துறை அமைச்சர் கூறியதையும் ஞாபகபடுத்தினார். அத்துடன் கல்விசார் புலமையுடன் தொழில்சார் புலமையும் ஒரு சேவையை வழங்குபவருக்கு அவசியம் எனவும் சுட்டிக்காட்டினார். அத்துடன் இறுதியாக புதிதாக நியமன பெரும் அனைவருக்கும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.