வட மாகாணத்திற்கு உட்பட்ட விடுதிகள் மற்றும் உணவக உரிமையாளர்கள் உடனான கலந்துரையாடல் வடமாகாண ஆளுநர் கௌரவ திருமதி பி.எஸ்.எம் சாள்ஸ் அவர்களின் தலைமையில், வடமாகாண ஆளுநர் செயலகத்தில் 02.12.2020 ஆம் திகதி இடம்பெற்றது.
இவ் அமர்வில் ஆளுநரின் செயலாளர், உதவி செயலாளர், வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளர், வடமாகாண சுகாதார துறை பணிப்பாளர், வடமாகாண சுற்றுலாத்துறை தலைவர், விடுதிகள் மற்றும் உணவக உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.
இதன் போது covid-19 தொற்று இடரின் அசாதாரண நிலைமைக்குள் விடுதிகள் மற்றும் உணவகங்களை இயக்குவதில் உள்ள பிரச்சனைகளையும், கடைப்பிடிக்க வேண்டிய சட்ட நடைமுறைகள் தொடர்பான விளக்கமின்மை பற்றியும் விடுதிகள் மற்றும் உணவக உரிமையாளர்கள் கௌரவ ஆளுநரிடம் தெரிவித்ததையடுத்து, covid-19 காலப்பகுதியில் பின்பற்ற வேண்டிய சட்ட நடைமுறைகள் அடங்கிய அறிக்கை ஒன்றை தயாரித்து விடுதிகள் மற்றும் உணவக உரிமையாளர்களுக்கு தெளிவாக அறிவுறுத்துவதுடன் பொது சுகாதார பரிசோதகர்கள் தேசிய சட்ட நடைமுறைகள் தவிர்ந்த எந்த ஒரு நடைமுறைகளையும் பின்பற்ற வேண்டாம் எனவும் கௌரவ ஆளுநர் தெரிவித்தார்.
மேலும் நாட்டில் உள்ள அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு மண்டபங்களில் நடைபெறும் விழாக்களிற்கு மறு அறிவித்தல் வரை தடை விதிக்கப்பட்டுள்ளது என்பதையும், அரசாங்கத்தில் உள்ள நிதி பற்றாக்குறை, அரசாங்கம் covid-19 தொற்றாளர்கள் மற்றும் தனிமைப்படுத்தலில் உள்ளவர்களுக்கு செலவிடும் தொகை என்பனவற்றை நினைவு படுத்தியதுடன், அனைவரும் தேசிய சட்ட நடைமுறைகளை பின்பற்றி பொறுப்புணர்ச்சியுடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.