வடமாகாண சபை ஒளிவிழா-2022 நிகழ்வானது வடக்கு மாகாண பிரதம செயலாளர் அவர்களின் தலைமையில் உத்தியோகத்தர்களின் ஒத்துழைப்புடன் 27.12.2022 அன்று செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு வடக்கு மாகாண பிரதம செயலாளர் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண பிரதம செயலாளர் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக அமலமரித் தியாகிகள் சபையை சேர்ந்த அருட்தந்தை ஜீவாபோல் அவர்களும் மற்றும் கல்வாரி ஆலய பிரதம போதகர் விக்ரம் அவர்களும் கலந்துகொண்டதுடன் பிரதிப் பிரதம செயலக செயலாளர்கள், ஏனைய உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்வினை சிறப்பித்திருந்தார்கள்.
விருந்தினர்கள் வருகையுடன் உலகிற்கு ஒளியாக வந்த இயேசுபாலனுக்கு ஒளிவிளக்கேற்றி இந்நிகழ்வானது ஆரம்பிக்கப்பட்டது. தொடர்ந்து சென் பெனடிக்ற் தேவாலய மாணவர்களால் வரவேற்பு நடனம் இடம்பெற்றதுடன் பிரதிப் பிரதம செயலக நிர்வாகத்தின் உதவிப் பிரதம செயலாளர் அவர்களால் வரவேற்புரையும் நிகழ்த்தப்பட்டது.
தொடர்ந்து அதிதிகளின் உரைகள், புனித திரேசாள் ஆலய மாணவர்களின் நடனம் என்பனவும் இடம்பெற்றன. மேலும் பிரதம செயலக கொத்தணி உத்தியோகத்தர்களால் கரோல் கீதங்கள் இசைக்கப்பட்டதுடன் நிகழ்வுகளில் பங்கேற்ற மாணவர்களுக்கு அதிதிகளால் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக ஆசியுரையாற்றிய அமலமரித் தியாகிகள் சபையை சேர்ந்த அருட்தந்தை அவர்கள் கருத்து தெரிவிக்கையில் ‘ ஒளிவிழா என்பது இயேசுக்கிறிஸ்துவின் பிறப்பு விழா எனவும் காரிருளில் நடந்து வந்த மக்கள் பேரொளியை கண்டார்கள் என்கின்ற விடியல் ஒவ்வொருவருக்கும் நிஜமாக வேண்டும். இப்பிறப்பு விழாவானது வெறுமனே கொண்டாட்டத்துடன் முடிவடையாமல் அதனை எம் வாழ்வாக கொண்டு செயற்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டதுடன் அனைவருக்கும் இறையாசியையும் நல் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டதுடன் இவ்விழா ஒவ்வொருவருக்கும் விடியலை தர வேண்டும்’ எனவும் வாழ்த்து தெரிவித்தார்.
தொடர்ந்து சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கல்வாரி ஆலய பிரதம போதகர் அவர்கள் கருத்து தெரிவிக்கையில் ‘இஸ்ரவேல் தேசத்தில் பெத்தலகேம் பட்டணத்தில் மாட்டுக்கொட்டிலில் இயேசு கிறிஸ்து பாலகனாக அவதரித்த நாளைத்தான் கிறிஸ்மஸ் விழாவாக கொண்டாடுகின்றோம் என மீட்பின் இராஜாவின் மாட்சியின் மகத்துவத்தை மகிமையாக பகிர்ந்தளித்தார். அத்துடன் வடமாகாணத்தில் மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ள நிலையில் எல்லோரும் இணைந்து சரியான வகையில் மாணவர்களை வழிநடத்த வேண்டும்; எனக் கூறியதுடன் அனைவருக்கும் கிறிஸ்து பிறப்பு நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார்.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றிய வடக்கு மாகாண பிரதம செயலாளர் அவர்கள் கருத்து தெரிவிக்கையில் ‘ இவ்விழாவானது மன அழுத்தத்திலிருந்து விடுபடும் சந்தோஷமான திருநாள் எனவும் ஆடம்பரமான செலவுகளைக் குறைத்து விசேட தேவையுடைய பிள்ளைகள் மற்றும் வறியவர்களின் வாழ்க்கைக்கு உதவி செய்ய அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும்’ எனவும் குறிப்பிட்டார். மேலும் நிகழ்வுகளை சிறப்பித்த அனைவருக்கும் நன்றியினையும், நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார்.