வடமாகாண ஆளுநருக்கும் இராணுவதளபதிக்குமிடையில் சந்திப்பு

23ஆவது இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களை இன்று (20) பிற்பகல் ஆளுநர் செயலகத்தில் சந்தித்தார்.

இந்த சந்திப்பின் போது போருக்கு பின்னரான வடமாகாணத்தில் இராணுவத்தினர் மேற்கொள்ளும் பாதுகாப்பு மற்றும் மனிதாபிமான நடவடிக்கைககள் குறித்து இராணுவ தளபதி அவர்கள் கௌரவ ஆளுநர் அவர்களுக்கு இதன்போது விளக்கமளித்ததுடன் தனது தலைமைத்துவத்தின் கீழ் அதனை தொடந்தும் முன்னெடுத்து செல்வேன் என்றும் குறிப்பிட்டார்.

2015ஆம் ஆண்டு ஜனவரி 8 அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் பதவியேற்றதன் பின்னர் இராணுவத்தின் செயற்பாடுகளில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டதை குறிப்பிட்ட ஆளுநர் அவர்கள் வடமாகாணத்தில் அதனை கண்கூடாக காணக்கூடியதாக உள்ளது என்றும் தெரிவித்தார்.

இதேவேளை வடமாகாணத்தில் நிலவும் காணிப்பிரச்சனைகள் தொடர்பில் கருத்து வெளியிட்ட கௌரவ ஆளுநர் அவர்கள் இராணுவத்தின் பாவனையிலுள்ள தனியார் காணிகளில் விடுவிக்க கூடிய காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார்.
மேலும், தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காக இராணுவத்தினால் விடுவிக்க முடியாத காணிகளை இனங்கண்டு அவற்றையும் அறிவிக்கவேண்டும் என்றும் ஆளுநர் அவர்கள் இராணுவத்தளபதியிடம் கேட்டுக்கொண்டார்

இதன்போது கருத்துதெரிவித்த இராணுவத்தளபதி, இராணுவத்தின் பாதுகாப்பு தேவைகளுக்காக வைத்திருக்க முடியுமான காணிகள் தவிர ஏனைய காணிகள் விடுவிக்கப்பட்டுள்ள அதேவேளை இன்னும் விடுவிக்க முடியுமான காணிகள் இருப்பின் அவற்றையும் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கலாம் என்றும் குறிப்பிட்டார்.

வடக்கு ஆளுநரின் ஊடகப்பிரிவு