வடக்கு மாகாண வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனங்களின் இணையத்தை உருவாக்குவதற்கு பதிவு செய்யப்பட்ட வர்த்தக சம்மேளனங்களிடமிருந்து பிரதிநிதிகளைப் பரிந்துரைக்குமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநரின் செயலாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.
வடக்கு மாகாணத்திலுள்ள வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனங்களின் பிரதிநிதிகளுடன் கடந்த நவம்பர் 14 மற்றும் டிசம்பர் 4 ஆம் திகதிகளில் நடைபெற்ற கலந்தாலோசனை கூட்டங்களைத் தொடர்ந்து, ‘வடக்கு மாகாண வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனங்களின் இணையத்தை’ உருவாக்குவதற்கு ஒருமனதாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தீர்மானத்துக்கு அமைவாக, பதிவு செய்யப்பட்ட வர்த்தக சம்மேளனங்களிடமிருந்து பிரதிநிதிகளின் பரிந்துரைகளைக் கோரி வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் சி.சத்தியசீலன் அவர்கள் அறிவித்தலை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் ஆளுநரின் செயலாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
புதிதாக உருவாக்கப்படவுள்ள இந்த இணையமானது, எமது மாகாணத்தின் வர்த்தக சமூகத்தின் கூட்டு நலன்களை மேம்படுத்துவதற்கும், வர்த்தக சம்மேளனங்களுக்கும் மாகாண நிர்வாகத்துக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்குமான ஒரு ஒருங்கிணைந்த தளமாகச் செயற்படும்.
இந்த இணையத்தை உத்தியோகபூர்வமாக நிறுவுவதன் அடுத்த கட்டமாக, அதன் ஆரம்பகால நிர்வாகிகளைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் நடத்தப்படவுள்ளது. இதன்போது பின்வரும் நான்கு முக்கிய பதவிகளுக்கு நிர்வாகிகள் தெரிவு செய்யப்படுவார்கள்:
தலைவர், உப தலைவர், செயலாளர், பொருளாளர்
ஜனநாயக முறைப்படியான வாக்கெடுப்பு மூலம் இப்பதவிகளுக்கானவர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.
வடக்கு மாகாணத்தில், கம்பனிகள் பதிவாளர் நாயகத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வர்த்தக சம்மேளனங்கள் ஒவ்வொன்றும், தேர்தல் செயல்முறையில் பங்கேற்பதற்காகத் தமது சம்மேளனத்தைச் சேர்ந்த இருவரை (02) பிரதிநிதிகளாகப் பரிந்துரைக்குமாறு கோரப்படுகின்றார்கள். பரிந்துரைக்கப்படும் பிரதிநிதிகள் அந்தந்தச் சம்மேளனத்தின் நன்மதிப்புள்ள உறுப்பினர்களாக இருப்பது அவசியமாகும்.
எனவே, பரிந்துரைக்கப்படும் பிரதிநிதிகளின் பெயர்கள் மற்றும் தொடர்பு விவரங்களை, சம்மேளனத்தின் அதிகாரபூர்வ அதிகாரியால் உறுதிப்படுத்தப்பட்டு, எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்கு (19.12.2025) முன்னதாக ஆளுநர் செயலகத்துக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
வடக்கு மாகாண வர்த்தக சமூகம் ஒரே குரலில் ஒலிப்பதற்கும், பொதுவான சவால்களைக் கூட்டாக எதிர்கொள்வதற்கும் இந்த இணையத்தின் உருவாக்கம் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும். எனவே, அனைத்து சம்மேளனங்களும் இதில் முனைப்புடன் பங்குகொண்டு தகுதியான பிரதிநிதிகளைப் பரிந்துரைக்குமாறு ஆளுநரின் செயலாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.
