வடக்கு மாகாண வரலாற்றில் பாரிய குடிநீர் திட்டத்தை மக்கள் மயப்படுத்தியஜனாதிபதிக்கு, ஆளுநர் நன்றி தெரிவிப்பு

ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் இலங்கை அரசாங்கத்தின் நிதி  அனுசரணையில், யாழ்ப்பாணம் – கிளிநொச்சி நீர்வழங்கல் வேலைத்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட தாளையடி கடல் நீர் சுத்திகரிப்பு நிலையம் மேன்மை தங்கிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இன்று (02/08/2024) திறந்து வைக்கப்பட்டது. இந்த கடல் நீர் சுத்திகரிப்பு நிலையம் 266 மில்லியன் டொலர்கள் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டு அமைச்சர் ஜீவன் தொண்டமான், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பாராளுமன்ற உறுப்பினர்கள், தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துக் கொண்டனர்.

இதன்போது உரையாற்றிய வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் அவர்கள்,  ”வடமாகாணத்தில் பாரிய குடிநீர் திட்டத்தை வெற்றியடையச் செய்வதற்கு உதவிய ஜனாதிபதிக்கு நாம் நன்றி கூற வேண்டும். 2015 ஆம் ஆண்டில், அவர் பிரதமராக இருந்த காலத்தில், முழுத் திட்டத்தையும் சீரமைத்து, அதற்குத் தேவையான மேலதிக நிதி வசதிகளைப் பெற்றுக்கொள்ள வழி செய்தார். 2017 ஆம் ஆண்டில், ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் (ADB) மேலதிக நிதியுதவி வழங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன் மூலம் திட்டம் மேலும் வலுவடைந்தது. இந்த ஒப்பந்தம் கடல் நீரில் உப்பு நீக்கும் நிலையத்தின் செயல்பாட்டை எளிதாக்கிய அதேவேளை, அதன் நிர்மாணம் மற்றும் ஐந்தாண்டு செயல்பாட்டு திட்டம் உட்பட திட்டத்தின் மேலதிக செலவுகளை ஈடுசெய்யவும்  உதவியது. ஜனாதிபதியின் அர்ப்பணிப்பின் பலனாக யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் வாழும் சுமார் 3 இலட்சம் மக்களின் நீண்டகாலத் தேவையாக இருந்த பாதுகாப்பான குடிநீர் வசதி இன்று கிடைத்துள்ளது. மேலும், யாழ்ப்பாண நகரில் வாழும் 80,000 மக்களின் சுகாதார வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளதுடன், வடமாகாண விவசாயத் துறையும் குறிப்பிடத்தக்க நன்மைகளைப் பெற்றுள்ளது. இந்த திட்டம் வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட பாரிய குடிநீர் திட்டமாகும். இந்த திட்டத்தை முழுமையாக நிறைவு செய்ய உதவிய கிராம மக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி” என தெரிவித்தார்.