வடக்கு மாகாண மட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான மெய்வல்லுனர் போட்டி – 2025

மாவட்ட மட்டத்தில் தெரிவு செய்யப்பட்டு, நேரடியாக மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி விளையாட்டிற்குரிய மாற்றுத்திறன் வகைப்பாட்டை உறுதிப்படுத்திய மாற்றுத்திறனுடைய வீர வீராங்கனைகளுக்கான முதலாவது மாகாண மட்ட மெய்வல்லுனர் போட்டியானது துரையப்பா விளையாட்டரங்கில் 2025.09.10ஆம் திகதி மாகாண சமூகசேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில்; நடாத்தப்பட்டது.

ஆரம்ப நிகழ்வானது காலை 8.30 மணிக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்கள பணிப்பாளர் திருமதி. தனுஜா லுக்சாந்தன் தலைமையில் பிரதம விருந்தினர் திரு.மு.நந்தகோபாலன் (செயலாளர், மகளிர் விவகார அமைச்சு) அவர்களால் ஒலிம்பிக் தீபம் ஏற்றி ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அறிவுசார் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள் (T/F20), உடலியல் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள் (T/F38,T/F40,T/F41, T/F43, T/F44, T/F46, T/F47, T/F53, T/F54, T/F55, T/F63, T/F64) செவிப்புலனற்றவர்கள் மற்றும் விழிப்புலனற்றவர்கள் போன்ற மாற்றுத்திறன் வகைப்படுத்தலின் கீழ் 100மீற்றர் ஓட்டம், 200 மீற்றர் ஓட்டம், குண்டெறிதல், தட்டெறிதல், ஈட்டி எறிதல், நீளம் பாய்தல் மற்றும் உயரம் பாய்தல் ஆகிய போட்டிகள் நடைபெற்றது.

போட்டிகளின் இறுதி நிகழ்வானது திரு.மு.நந்தகோபாலன் (செயலாளர், மகளிர் விவகார அமைச்சு) அவர்களின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டதுடன் பிரதம விருந்தினராக கௌரவ ஆளுநரின் செயலாளர் திரு சி.சத்தியசீலன் சிறப்பு விருந்தினராக உதவிப்பிரதம செயலாளர் திருமதி.அ.அனெற் நிந்துஸா கௌரவ விருந்தினராக யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி வு.சத்தியமூர்த்தி ஆகியோர்கள் கலந்துகொண்டு நிகழ்வினை சிறப்பித்திருந்தனர். போட்டிகளில் பங்குபற்றி வெற்றியீட்டிய வெற்றியாளர்களுக்கு பதக்கங்கள் அணிவிக்கப்பட்டு பரிசில்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

அதிக பதக்கங்களை பெற்றுக்கொண்ட மாவட்ட மட்ட மற்றும் பிரதேச மட்டத்திற்கான வெற்றிக்கிண்ணங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் மாலை 6.00 மணியளவில் நிகழ்வுகள் இனிதே நிறைவடைந்தது.