வடக்கு மாகாண துறைசார் வல்லுநர்களுக்கு இடையிலான துடுப்பாட்டப்போட்டியின் பிரதம விருந்தினராக கௌரவ ஆளுநர் கலந்து சிறப்பித்தார்

வடக்கு மாகாண துறைசார் வல்லுநர்களுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி விளையாட்டு அரங்கில் 28/04/2024 அன்று  பிற்பகல் நடைபெற்றது. இந்த நிகழ்வின் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.

மன அழுத்தத்தை குறைத்து, உடல் ஆரோக்கியத்தை பேண இவ்வாறான விளையாட்டு போட்டிகள் தொடர்ந்தும் நடத்தப்பட வேண்டும் என கௌரவ ஆளுநர் இதன்போது தெரிவித்தார். அத்துடன் போட்டிகளில் வெற்றி தோல்வி என்பதையும் கடந்து, சந்தோசம், உடல் ஆரோக்கியம் ஆகியன கருத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயங்கள் எனவும் கௌரவ ஆளுநர் கூறினார். தோல்வியடைந்த அணி அடுத்த வெற்றி நோக்கி எவ்வாறு நகர்வது என்ற விடயத்தை கற்றுக்கொள்ள முடியும் என கௌரவ ஆளுநர் தெரிவித்தார்.

துறைசார் வல்லுநர்களுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியில் கலந்துக்கொண்ட பொறியியலாளர்கள், சட்டத்தரணிகள், வைத்தியர்கள் அனைவருக்கும் கௌரவ ஆளுநர்  வாழ்த்துக்களை தெரிவித்ததோடு, பதக்கங்களை அணிவித்து கௌரவித்தார். அத்துடன் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற வட மாகாண வைத்தியர்கள் அணிக்கு கௌரவ ஆளுநரால் வெற்றி கேடயம் வழங்கப்பட்டது.