வடக்கு மாகாண சுகாதாரத்துறையை வலுப்படுத்த நான்கு நாட்களில் 2,103 மில்லியன் ரூபா பெறுமதியான 6 வேலைத்திட்டங்கள் ஆரம்பம்

வடக்கு மாகாண சுகாதாரத்துறையை மேலும் வலுப்படுத்தும் வகையில், கடந்த நான்கு நாள்களில் 2,103 மில்லியன் ரூபா பெறுமதியான ஆறு முக்கிய வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.

மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட பொது மருத்துவமனைகளில் தலா 600 மில்லியன் ரூபா பெறுமதியான சுகாதாரத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டதுடன், வவுனியாவில் 170 மில்லியன் ரூபா செலவில் தாதியர் விடுதியும், கிளிநொச்சியில் 185 மில்லியன் ரூபா செலவில் மருத்துவ உத்தியோகத்தர்களுக்கான விடுதியும், சாவகச்சேரி ஆதார மருத்துவமனையில் 336 மில்லியன் ரூபா பெறுமதியான மருந்துக் களஞ்சியம் மற்றும் பணியாளர் குடியிருப்பு உள்ளிட்ட திட்டமும் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் தாதியர் உத்தியோகத்தர்களுக்கான 212 மில்லியன் ரூபா பெறுமதியான புதிய குடியிருப்பு வளாகத்துக்கான அடிக்கல் நடுகை செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் தாதியர் உத்தியோகத்தர்களுக்கான புதிய குடியிருப்பு வளாகத்துக்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று (19.09.2026) சனிக்கிழமை பிற்பகல் நடைபெற்றது. சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை கௌரவ அமைச்சர் மருத்துவர் நளிந்த ஜயதிஸ்ஸ அவர்களின் பிரதான பங்கேற்புடன் நடைபெற்ற இந்நிகழ்வில், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களும் கலந்து கொண்டார்.

தமது உரையில் ஆளுநர், பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் தாதியர் உத்தியோகத்தர்களுக்காக குடியிருப்பு வளாகம் இரண்டு கட்டங்களாக முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த நான்கு நாள்களில் 2,103 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான சுகாதாரத் திட்டங்கள் வடக்கு மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்டிருப்பது முக்கியமான முன்னேற்றம் எனத் தெரிவித்த ஆளுநர், இதைவிட முக்கியமானது மத்திய அரசாங்கமும் மாகாண சபையும் இணைந்து செயற்பட்டால் மக்களின் தேவைகளை எவ்வாறு விரைவாக நடைமுறை நடவடிக்கைகளாக மாற்ற முடியும் என்பதை இந்த நான்கு நாட்களும் எடுத்துக்காட்டியுள்ளதாகக் குறிப்பிட்டார்.

சுகாதார அமைச்சர் மருத்துவர் நளிந்த ஜயதிஸ்ஸ அவர்கள் கடந்த புதன்கிழமை முதல் இன்று வரை எவ்வித ஓய்வுமின்றி இடமிருந்து இடம் சென்று, ஒவ்வொரு நிகழ்விலும் பங்கேற்று, ஒவ்வொரு மருத்துவமனையிலும் நிலைமைகளை நேரில் பார்வையிட்டு வருவதாகவும் ஆளுநர் பாராட்டுத் தெரிவித்தார். சுகாதாரத்துறையுடன் தொடர்புடைய நிகழ்வுகளில் மாத்திரமன்றி, ஏனைய அரச திட்டங்களிலும் அமைச்சர் பங்கேற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தேவைகளை நேரில் பார்த்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடனேயே அமைச்சரின் இந்த வேகம் அமைந்துள்ளதாகக் குறிப்பிட்ட ஆளுநர், பல சந்தர்ப்பங்களில் ஒரு தேவை அமைச்சரிடம் முன்வைக்கப்பட்டவுடன், அதற்கான அதிகாரியை உடனடியாகத் தொடர்புகொண்டு நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தியதையும், அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்கான வழிகாட்டல்களை வழங்கியதையும் சுட்டிக்காட்டினார்.

வடக்கு மாகாணத்தின் சுகாதாரத்துறையின் பலம் மற்றும் குறைபாடுகளை கடந்த நான்கு நாள்களில் அமைச்சர் நேரடியாகப் பார்வையிட்டுள்ளதாகத் தெரிவித்த ஆளுநர், அடுத்த கட்டத்தில் வடக்கு மாகாண சுகாதாரத்துறையை மேலும் வலுப்படுத்த வேண்டிய விடயங்கள் தொடர்பில் தெளிவான திட்டவரை ஒன்று அமைச்சரின் கவனத்தில் உருவாகியிருக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.

இந்நிகழ்வில் தாதியர் உத்தியோகத்தர்களுக்கான புதிய விடுதி வளாகத்துக்கான அடிக்கல் நடுகை செய்யப்பட்டது. அதன் பின்னர் மேடை நிகழ்வுகள் நடைபெற்றன. தொடர்ந்து, மருத்தவமனை விடுதிகளைப் பார்வையிட்ட பின்னர் மருத்துவ நிபுணர்கள், மருத்துவர்கள், தாதியர்களுடனான கலந்துரையாடலும் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீபவானந்தராசா, வடக்கு மாகாண பிரதம செயலாளர், வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர், வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், யாழ்ப்பாண மாவட்டச் செயலர், யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் பணிப்பாளர், யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளர், பருத்தித்துறை ஆதார மருத்துவமனையின் அத்தியட்சகர், மருத்துவ நிபுணர்கள், மருத்துவர்கள், தாதியர் உத்தியோகத்தர்கள், சுகாதார சேவை உதவியாளர்கள் மற்றும் நோயாளர் நலன்புரிச் சங்கத்தின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.