“பதவி என்பது கதிரையில் இருப்பதற்காகக் கிடைப்பதல்ல; மக்களுக்கு உதவுவதற்காக வழங்கப்படுவது” – ஆளுநர் நா. வேதநாயகன்

பதவி என்பது கதிரையில் இருப்பதற்காகக் கிடைப்பதல்ல, அது மக்களுக்கு உதவி செய்வதற்காகவே வழங்கப்படுகின்றது. பதவியில் இருப்பவர்கள் நூறு வீதம் நேர்மையுடன், எவ்வித பாகுபாடும் இன்றி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.

2026ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் தேசிய மற்றும் வலய மட்டங்களில் முதலிடம் பெற்ற மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு இன்று (20.09.2026) ஞாயிற்றுக்கிழமை காலை யாழ்ப்பாணம் செம்மணி வீதியிலுள்ள தொண்டைமானாறு தேசிய வெளிக்கள நிலையத்தில், அதன் தலைவர் பேராசிரியர் கலாநிதி சிவசாந்தினி குகநாதன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள், மாணவர்களைப் பாராட்டி 13 வலயங்களிலும் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசில்களை வழங்கி வைத்தார்.

தமது உரையில் ஆளுநர் மேலும் தெரிவித்ததாவது:

பதவியில் இருப்பது தனக்கான அதிகாரத்தை வெளிப்படுத்துவதற்காக அல்ல எனக் குறிப்பிட்ட அவர், பதவியில் இருக்கும்போது கர்வம் கொள்ளக்கூடாது, அந்தப் பதவியைப் பயன்படுத்தி மற்றவர்களுக்கு எவ்வாறு உதவ முடியும் என்பதையே சிந்திக்க வேண்டும் எனத் தெரிவித்தார். தமது தந்தையார் தம்மை வளர்க்கும்போது திருக்குறள் கருத்துகளை எடுத்துக்கூறி வளர்த்ததாகவும், எதிரியாக இருந்தாலும் ஒருவர் உதவி நாடி வந்தால் அவரை மதித்து உதவ வேண்டும் என்ற பண்பை அதன்மூலம் கற்றுக்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மாணவர்கள் புத்தகப் படிப்பில் மாத்திரம் தங்களை மட்டுப்படுத்திக்கொள்ளக் கூடாது எனக் குறிப்பிட்ட ஆளுநர், கல்வியால் மட்டும் உயர்ந்து பதவியைப் பெற்றுக்கொள்வது போதாது, ஏனையோருக்கு உதவும் மனப்பான்மை, இரக்கம் மற்றும் சமூகப் பொறுப்புணர்வு ஆகியவற்றையும் வளர்த்துக்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார்.

தனது அருகில் ஒருவர் விழுந்து கிடந்தாலும் அவரைக் கைகொடுத்து தூக்கிவிட வேண்டும் என்ற எண்ணம் உருவாகாத வகையில் கல்வி அமைந்துவிடக்கூடாது எனக் குறிப்பிட்ட அவர், எந்தவொரு எதிர்பார்ப்பும் இன்றி மற்றவர்களுக்கு உதவ முன்வர வேண்டும் என வலியுறுத்தினார். அவ்வாறு உதவும் மனப்பான்மையுடன் வாழ்ந்தால், தேவையான நேரத்தில் உதவுவதற்கு பல கரங்கள் தம்மைச் சுற்றி இருக்கும் எனவும் ஆளுநர் தெரிவித்தார்.

இணைப்பாடவிதானச் செயற்பாடுகளின் முக்கியத்துவத்தையும் ஆளுநர் வலியுறுத்தினார். இணைப்பாடவிதானச் செயற்பாடுகளில் ஈடுபடாமல் கல்வியில் மாத்திரம் முன்னேறுவதால் முழுமையான ஆளுமையை உருவாக்க முடியாது எனக் குறிப்பிட்ட அவர், விளையாட்டு, கலை உள்ளிட்ட இத்தகைய செயற்பாடுகளே மாணவர்களை ஆளுமையுள்ளவர்களாகவும் சிறந்த தலைமைத்துவப் பண்புடையவர்களாகவும் வளர்க்கின்றன எனத் தெரிவித்தார்.

இணைப்பாடவிதானச் செயற்பாடுகளுக்கு மாணவர்கள் ஈடுபடுவதில் பெற்றோர்களே சில சந்தர்ப்பங்களில் தடையாக இருப்பதாக முன்னர் உரையாற்றிய முன்னாள் வலயக் கல்விப் பணிப்பாளர் தெய்வேந்திரராஜா அவர்கள் குறிப்பிட்ட விடயத்தையும் ஆளுநர் சுட்டிக்காட்டினார்.

தாம் கல்வி கற்ற காலத்தில் ஆசிரியர் ஒருவர் தண்டித்தால், அதற்கான காரணத்தை அறிந்துகொண்டு வீட்டிலும் ஒழுக்கப்படுத்தும் நிலை இருந்ததாகக் குறிப்பிட்ட அவர், இன்று நிலைமை மாறியுள்ளதாகத் தெரிவித்தார். ஆசிரியர் ஒருவர் மாணவரைத் தண்டிப்பது தனிப்பட்ட பழிவாங்கலுக்காகவோ வன்மத்துக்காகவோ அல்ல, அந்த மாணவரை ஒழுக்கமுள்ள நல்ல பிள்ளையாக வளர்த்தெடுப்பதற்காகவே எனவும் ஆளுநர் குறிப்பிட்டார்.

மேலும், தொண்டைமானாறு தேசிய வெளிக்கள நிலையத்தை ஏனைய மாகாணங்களைச் சேர்ந்தவர்கள் ஆக்கபூர்வமாகப் பயன்படுத்தி வரும் நிலையில், வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த பாடசாலைகளும் மாணவர்களும் அதனைப் பயன்படுத்தும் அளவு குறைவாக இருப்பதாகவும், இந்த நிலைமை மாற்றப்பட வேண்டும் எனவும் ஆளுநர் தெரிவித்தார்.

2026ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சிறப்பான பெறுபேறுகளைப் பெற்று தேசிய மற்றும் வலய மட்டங்களில் முதலிடம் பெற்ற மாணவர்களின் சாதனைகளைப் பாராட்டிய ஆளுநர், அவர்களின் எதிர்காலக் கல்விப் பயணத்திற்கும் ஆளுமை வளர்ச்சிக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.