வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும், இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கத்தினருக்கும் இடையிலான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் வியாழக்கிழமை (13.02.2025) இடம்பெற்றது. இந்தக் கலந்துரையாடலில் பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டது.
இந்தக் கலந்துரையாடலில் ஆசிரியர் சேவைச் சங்கத்தின் தேசிய அமைப்பாளரும், கௌரவ பிரதியமைச்சருமான பிரதீப் சுந்தரலிங்கம், ஆசிரியர் சேவைச் சங்கத்தின் உபதலைவரும் கௌரவ நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெகதீஸ்வரன் ஆகியோரும், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலர் ம.பற்றிக் டிறஞ்சன், வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் க.பிரட்லி ஜெனட், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் மு.நந்தகோபாலன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
யாழ்ப்பாணத்தின் வலிகாமம் கல்வி வலயத்தின் உள்ளக இடமாற்றம் 2 ஆண்டுகளாக முன்னெடுக்கப்படவில்லை என ஆசிரியர் சேவைச் சங்கத்தினரால் சுட்டிக்காட்டப்பட்ட நிலையில், இடமாற்றச் சபையைக் கூட்டுவதற்கான அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலர் பதிலளித்தார். அதேநேரம் இடமாற்றச் சபையில் சட்டரீதியான சங்கங்களுக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்படுவதை உறுதிப்படுத்தவேண்டும் என பிரதியமைச்சர் பிரதீப் சுந்தரலிங்கம் கோரிக்கை முன்வைத்தார்.
இதேவேளை தேசிய இடமாற்றக்கொள்கையை நடைமுறைப்படுத்துவதன் ஊடாக செயற்பாடுகளை இலகுவாக்கலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வரன் ஆலோசனை முன்வைத்தார். இலங்கையின் ஏனைய மாகாணங்களில், மாகாணத்துக்குள்ளான மாவட்டங்களின் பரம்பல் சீராக உள்ளது எனவும், வடக்கு மாகாணத்தில் அவ்வாறானதொரு நிலைமை இல்லாமையால் தேசிய இடமாற்றக் கொள்கையை நடைமுறைப்படுத்தும்போது யாழ்ப்பாணத்தின் வெற்றிடங்கள் பூர்த்தி செய்யப்பட்டு வன்னிப் பிராந்தியத்தில் வெற்றிடங்கள் பூர்த்தி செய்யப்படாத நிலைமை காணப்படும் என்று கல்வி அமைச்சின் செயலரும், பணிப்பாளரும் பதிலளித்தனர்.
இடமாற்றங்களின்போது அரசியல் தலையீட்டுக்கு அனுமதிக்கவேண்டாம் எனவும் சுயாதீனமாகச் செயற்படுமாறும் அவ்வாறு செயற்படும்போது அந்தச் செயற்பாட்டுக்கு பக்கபலமாக இருப்போம் என பிரதியமைச்சர் இங்கு சுட்டிக்காட்டினார்.
சேவையின் தேவை கருதிய இடமாற்றங்களால் ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டதுடன் அவற்றை கட்டுப்படுத்தியுள்ளதாகவும் கல்வி அமைச்சின் செயலர் இங்கு குறிப்பிட்டார். அவ்வாறான இடமாற்றங்கள் தொழிற்சங்கங்களுக்கு தெரியப்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் இதன்போது முன்வைக்கப்பட்டது.
பாடசாலைகளில் மலசலகூட வசதிகள் ஒழுங்காக இல்லை என்றும், பெண்பிள்ளைகள், பெண் ஆசிரியர்கள் இதனால் பல சிரமங்களை எதிர்கொள்வதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வரன் குறிப்பிட்டார். அத்துடன் சில பாடசாலைகளுக்கு கட்டிக்கொடுக்கப்பட்ட விடுதிகள் பயன்படுத்தப்படாமல் உள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
பாடசாலை மலசல கூடங்களை துப்புரவு செய்வதற்கு மாணவர்களை அதிபர்கள் பணித்தால் பல்வேறு பிரச்சினைகள் வருகின்றன என்றும் எதிர்காலத்தில் மாணவர்களிடத்தில் இது தொடர்பான ஒழுங்குமுறையொன்றை உருவாக்கி செயற்படுத்தவேண்டும் எனவும் கல்வி அமைச்சின் செயலர் குறிப்பிட்டார்.
அதிபர்கள், ஆசிரியர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட ஒழுக்காற்று விசாரணைகள் இழுத்தடிக்கப்படுவதாக ஆசிரியர் சேவைச் சங்கப் பிரதிநிதிகள் குறிப்பிட்டனர். அவற்றை முன்னெடுப்பதிலுள்ள சவால்கள் தொடர்பில் கல்வி அமைச்சின் செயலர் விளக்கமளித்தார். இருப்பினும் விரைந்து அதனை முடிக்குமாறு ஆளுநர் அறிவுறுத்தல் வழங்கினார்.
வலயக் கல்வி அலுவலகம், மாகாண கல்வித் திணைக்களம், கல்வி அமைச்சு என்பவற்றில் கொடுக்கப்படும் கடிதங்களுக்கு ஏற்பு கடிதம் வழங்கப்பட வேண்டும் என்பதுடன், தேவையற்ற நிர்வாக தாமதம் ஏற்படுவதை தவிர்க்க வேண்டும் என்ற கோரிக்கை ஆசிரியர் சேவைச் சங்கத்தினரால் முன்வைக்கப்பட்டது. அதனைக் கவனிக்குமாறும், நிர்வாக தாமதங்களை குறைக்க நடவடிக்கை எடுக்குமாறும் ஆளுநர் பணித்ததுடன், நிர்வாக ரீதியான ஆளணி இடமாற்றங்களை வலயக் கல்விப் பணிமனைகளிலும் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.
பாடசாலை நிகழ்வுகளுக்கு வெவ்வேறு வழிகளிலும் பெற்றோரிடமிருந்து பணம் அறவிடப்படுவதாகவும் அத்துடன் பாடசாலைகளில் நடைபெறும் நிகழ்வுகளின் ஆடம்பரத்தை சுருக்க நடவடிக்கை எடுக்குமாறும் ஆசிரியர் சேவைச் சங்கத்தினர் கோரிக்கை முன்வைத்த நிலையில் அதனைச் செயற்படுத்துமாறு ஆளுநர் பணிப்புரை விடுத்தார். இந்தச் சந்திப்பில் இறுதியாக மேற்கொள்ளப்பட்ட அதிபர் நியமனங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.







