வடக்கு மாகாண உள்ளூராட்சி திணைக்களத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்படும் கௌரவ ஆளுநரின் சிநேகபூர்வ மக்கள் சந்திப்பின் மற்றுமொரு கட்டம் யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் நேற்று (29.02.2024) நடைபெற்றது. கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களின் தலைமையில் அச்சுவேலி சென்தேரேசா மகளிர் கல்லூரியில் இந்த மக்கள் சந்திப்பு நடைபெற்றது,
அச்சுவேலி பகுதியை சேர்ந்த பல சனசமூக நிலையங்களின் பிரதிநிதிகளும், பொதுமக்களும் இந்த சந்திப்பில் கலந்துக்கொண்டனர். வீதி சீரின்மை, பொது போக்குவரத்து சேவை முன்னெடுக்கப்படாமை, நூலக வசதியின்மை, வெள்ள அபாயம் உள்ளிட்ட பல சிக்கல்கள் தொடர்பில் பொதுமக்கள் தங்களின் ஆதங்கங்களை கௌரவ ஆளுநரிடம் இதன்போது தெரிவித்தனர்.
பொதுமக்களால் முன்வைக்கப்பட்ட பல பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும் என கௌரவ ஆளுநர் இதன்போது கூறினார். அத்துடன் ஏனைய பிரச்சினைகள் தொடர்பில் ஆராந்து அவற்றுக்கு தீர்வுகளை பெற்றுக் கொள்ளும் விதம் குறித்து உள்ளூராட்சி திணைக்களத்தினூடாக அறிவிப்பதாகவும் கௌரவ ஆளுநர் தெரிவித்தார்.
தங்களின் பிரச்சினைகள் தொடர்பில் கௌரவ ஆளுநர் நேரடியாக விஜயம் செய்து கலந்துரையாடியமை மிகுந்து மகிழ்ச்சி அளிப்பதாக கிராம மக்கள் தெரிவித்தனர். அத்துடன் ஆளுநர் அவர்களின் கருத்துப்படி விரைவில் தங்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும் என நம்புவதாகவும் மக்கள் தெரிவித்தனர்.