வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் திரு நாகலிங்கம் வேதநாயகன் அவர்கள் தலைமையில் ஆளுநரின் செயலகத்தில் நேற்று (08.10.2024) காலை காணிப் பிரச்சனைகள் தொடர்பான விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில் பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர், மாகாண காணி ஆணையாளர் மற்றும் மாகாணத்தில் உள்ள சகல மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
காணி இல்லாத பொது மக்களுக்கு காணிகளை வழங்குவதை விடுத்து வசதியானவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளமை தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. கௌரவ ஆளுநர் தெரிவிக்கையில், ஏழை மக்களுக்கு உரிய காணிகள் அவர்களுக்கு கிடைக்க வேண்டும் எனவும் காணி வழங்குவதில் இடம்பெறும் முறை கேடுகள் அநீதிகள் தொடர்பாகவும் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அதற்குரிய பொறுப்பு அலுவலர்களுக்கு உள்ளதாகவும் தொடர்ந்தும் தவறு செய்யும் அலுவலர்களுக்கு உரிய தண்டனை வழங்குவது தொடர்பாகவும் கடுமையான அறிவுறுத்தல் வழங்கினார்.
சில மாவட்டங்களில் மட்டுமே காணி அலுவலர்கள் சிறந்த முறையில் பணியாற்றுவதாக குறிப்பிட்டதுடன் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களில் காணி தொடர்பான பிரச்சினைகள் அதிகமாக உள்ளதால் அதனில் விசேட கவனம் எடுக்குமாறும் தெரிவிக்கப்பட்டது.
காணி தொடர்பான பிணக்குகளை தீர்ப்பதற்கு விசேட ஆணைக்குழு உருவாக்குவது தொடர்பாகவும் பரிந்துரைக்கப்பட்டது.
பொதுமக்களுக்கு எவ்வளவு தூரம் நாங்கள் உதவி செய்யலாம் என்ற நோக்கத்தோடு அரச உத்தியோகத்தார்கள் சேவையாற்ற வேண்டுமெனவும் மிக விரைவாகவும் அன்பானதாகவும் தரமானதாகவும் சேவைகளை வழங்குதல் வேண்டும், வழங்க முடியாத பட்சத்தில் குறித்த காரணத்தை தெளிவாக தெரியப்படுத்த வேண்டும். அவ்வாறு தெரியப்படுத்தாமல் மக்களை மீண்டும் மீண்டும் அலுவலகங்களுக்கு வரவழைக்கக் கூடாது எனவும், சில அலுவலர்கள் நடைமுறைப்படுத்தக் கூடிய விடயங்களை செய்யாமலும் நடைமுறைப்படுத்தக் கூடாத விடயங்களை செய்வதாகவும் சுட்டிக்காட்டினார். அவ்வாறானவர்கள் தொடர்பான முறைப்பாடுகள் கிடைக்க பெறுகின்றது. அவர்களுக்குரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் குறிப்பிட்டார். அரச அலுவலர்கள் சரியானவர்களை தேர்வு செய்து காணிகளை வழங்காமை மக்களுக்கு செய்கின்ற துரோகம் எனவும் தெரிவித்தார்.
அதே வேளையில் பொதுமக்கள் சிறிய சிறிய பிரச்சினைகளுக்காக வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் உள்ள அலுவலகத்திற்கு வருவதாகவும், அவ்வாறான பிரச்சனைகளை தமது பிரதேசத்தில் உள்ள உரிய அலுவலகங்களுக்கு சென்று சேவைகளை பெற்றுக் கொள்ளலாம் எனவும் குறிப்பிட்டார்.