வடக்கு மாகாண கல்வி அமைச்சின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம், கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் நடைபெற்றது.

வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று (17.06.2026) புதன்கிழமை மாலை நடைபெற்றது.

இக்கூட்டத்தில், கடந்த கூட்டத்தில் ஆராயப்பட்ட விடயங்களின் முன்னேற்றங்கள் மற்றும் கல்வி அமைச்சின் கீழ் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் குறித்து ஆராயப்பட்டன. மேலும் கல்வி, விளையாட்டு மற்றும் பண்பாட்டலுவல்கள் திணைக்களங்களின் ஊடாக பல்வேறு நிதி மூலங்களில் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்றங்களும் விரிவாக மீளாய்வு செய்யப்பட்டன. அபிவிருத்தித் திட்டங்களைத் துரிதப்படுத்துவதற்கான அறிவுறுத்தல்களும், அவற்றை முன்னெடுப்பதில் களத்தில் எதிர்கொள்ளும் இடர்பாடுகளைத் தீர்ப்பதற்கான ஆலோசனைகளும் இதன்போது ஆளுநரால் வழங்கப்பட்டன.

வடக்கு மாகாண கல்வித் திணைக்களத்துடன் தொடர்புடைய பல்வேறு இடமாற்றக் கொள்கைகள் தயாரிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், அவை தொடர்பில் தொழிற்சங்கங்களால் முன்வைக்கப்பட்ட அவதானிப்புகள் மாகாணப் பொதுச்சேவை ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஆளுநருக்குத் தெரியப்படுத்தப்பட்டது.

தமது நியமனப் பாடங்களைத் தவிர்த்து, வேறு பாடங்களைக் கற்பித்து வந்த ஆசிரியர்களுக்கு அதனை மாற்றுவதற்கு வழங்கப்பட்ட சந்தர்ப்பத்துக்கு அமைவாகக் கிடைக்கப்பெற்ற விண்ணப்பங்கள் குறித்தும், அதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பிலும் கூட்டத்தில் விளக்கமளிக்கப்பட்டது.

வலயங்களுக்குள்ளான ஆசிரியர் ஆளணிச் சீராக்கப் பணிகள் இன்னும் முழுமையடையவில்லை எனச் சுட்டிக்காட்டப்பட்ட நிலையில், அப்பணிகள் தற்போது தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாகவும், மிக விரைவில் அவை சீர்செய்யப்படும் எனவும் அதிகாரிகளால் உறுதியளிக்கப்பட்டது.

இடமாற்றங்கள் வழங்கப்பட்டு, முந்தைய பாடசாலைகளில் இருந்து விடுவிக்கப்பட்ட பின்னரும் இன்னும் புதிய பணியிடங்களில் கடமையைப் பொறுப்பேற்காத ஆசிரியர்கள் தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாகாணப் பிரதம செயலாளரால் உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

மாணவர்களுக்கான பாடசாலை உணவுத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் எவ்வாறான விடயங்களில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும் என்பது தொடர்பில் வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு ஆளுநரால் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியால் முன்னெடுக்கப்பட்டு வரும் இணையவழிக் கல்விச் செயற்பாடுகளில், கடந்த ஆண்டு காணப்பட்ட ஆர்வம் இம்முறை பாடசாலைகளிடம் இல்லை என்பதை ஆளுநர் சுட்டிக்காட்டினார். எனவே, வலயக் கல்விப் பணிப்பாளர்கள் தத்தமது வலயங்களுக்கு உட்பட்ட தேவையான பாடசாலைகளுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்கி, இத்திட்டத்தில் அவர்களை இணையச் செய்யுமாறு அவர் பணிப்புரை விடுத்தார்.

இந்த முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தில் வடக்கு மாகாண பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர், கல்வி அமைச்சின் செயலாளர், பிரதிப் பிரதம செயலாளர்கள் (நிர்வாகம், திட்டமிடல், நிதி, பொறியியல்), மாகாணக் கல்விப் பணிப்பாளர், விளையாட்டுத் திணைக்களப் பணிப்பாளர், பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர், மாகாணக் கட்டடங்கள் திணைக்களப் பணிப்பாளர், வலயக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் மாவட்ட விளையாட்டு, கலாசார உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.