வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் அவர்களின் தலைமையில் மும்மொழி கற்றல் நிலையத்தின் ஒருங்கிணைப்புடன் இடைநிலை மாணவர்களுக்கான ஆங்கிலத் தொடர்பாடல் திறன்- சான்றிதழ் வழங்கும் நிகழ்வானது 19.12.2022 அன்று திங்கட்கிழமை காலை 11.00 மணிக்கு வட மாகாண பிரதம செயலாளர் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக பிரதம செயலாளர்-வடக்கு மாகாணம் அவர்களும், செயலாளர் கல்வி அமைச்சு-வடக்கு மாகாணம் அவர்களும் சிரேஸ்ட உதவிச் செயலாளர்-கல்வி அமைச்சு, பிரதம கணக்காளர்-கல்வி அமைச்சு, உதவிச் செயலாளர்-இளைஞர் விவகார அலகு, வலயக் கல்விப் பணிப்பாளர்-யாழ்ப்பாணம், ஆங்கில உதவிப் பணிப்பாளர்-கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம், ஆங்கில பாட ஆசிரிய ஆலோசகர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என பலர் கலந்து சிறப்பித்திருந்தார்கள்.
மங்கள விளக்கேற்றும் வைபவத்தினைத் தொடர்ந்து ஆங்கில உதவிப் பணிப்பாளர்-யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி அவர்களினால் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டது. 90 மணித்தியாலங்களைக் கொண்ட இக்கற்கை நெறியில் கிளிநொச்சி வலயத்திலிருந்து 16 மாணவர்களும் யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியிலிருந்து 16 மாணவர்களும் யாழ்ப்பாணம் திருக்குடும்ப கன்னியர் மட பெண்கள் பாடசாலையிலிருந்து 14 மாணவர்களும் பங்கு பற்றியிருந்தார்கள். தொடர்ந்து மாணவர்களால் ஆங்கில தொடர்பாடல் திறனை விருத்தி செய்தமைக்கான நிகழ்வுகள் நிகழ்த்தப்பட்டன. தொடர்ந்து அதிதிகளின் உரைகள் மற்றும் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி கௌரவிக்கும் நிகழ்வும் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் தலைமையுரையாற்றிய வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் அவர்கள் கருத்து தெரிவிக்கையில், ஆங்கில மொழியின் முக்கியத்துவத்தினையும், சிங்கள மொழியின் முக்கியத்துவத்தினையும் எடுத்துக்கூறியதுடன் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பாராட்டு தெரிவித்து வாழ்த்தியதுடன் தனது நன்றியினையும் தெரிவித்துக் கொண்டார்.
மேலும் இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றிய வடக்கு மாகாண பிரதம செயலாளர் அவர்கள் கருத்து தெரிவிக்கையில் “ கல்விக்கான வளங்களாக ஆசிரியர்கள் காணப்படும் அதேவேளை கல்வி வளர்ச்சிக்கு அவர்களின் ஒத்துழைப்பு மிக அவசியம் எனவும் ஒரு நாட்டிற்கு பிள்ளைகள் தான் செல்வம் எனவும் குறிப்பிட்டார். அத்துடன் வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாண மாவட்டம் ஓரளவு ஆங்கில அறிவில் முன்னேற்றம் கண்டுள்ள அதே வேளையில் ஏனைய மாவட்டங்கள் குறைந்த மட்டத்திலேயே காணப்படுகின்றது. இம்மாவட்டங்களிலும் ஆங்கில அறிவில் முன்னேற்றம் காண வேண்டும். அத்துடன் “ஒழுக்கம் தான் அனைத்து வெற்றிக்குமான அடிப்படை” எனவே மாணவர்கள் சிறந்த கல்வியறிவுடன் தங்கள் திறன் மற்றும் ஒழுக்கத்தினை வளர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டார். தொடர்ந்து வடக்கு மாகாணமானது அசுத்தப்பட்டிருக்கின்றது அதனை தூய்மையாக்க வேண்டும். எனவே அதனை பாடசாலை மட்டத்திலுருந்தே ஆரம்பிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்ட அவர் சான்றிதழ் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு தெரிவித்ததுடன் ஆசிரியர்களுக்கும் வாழ்த்துக்களையும் நன்றியினையும் தெரிவித்துக் கொண்டார்.
இவ்வாறாக இந்நிகழ்வானது வடக்கு மாகாண கல்வி அமைச்சின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் அவர்களின் நன்றியுரையுடன் பி.ப 1.00 மணிக்கு நிறைவு பெற்றது.