வடக்கு மாகாண இப்தார் நிகழ்வின் பிரதம விருந்தினராக கௌரவ ஆளுநர் கலந்துசிறப்பித்தார்

ஏற்பாடு செய்யப்பட்ட இப்தார் நிகழ்வு யாழ்ப்பாணம் ஒஸ்மானியாக் கல்லூரியில் நேற்று மாலை (02/04/2024) நடைபெற்றது.

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்கள் நிகழ்வின் பிரதம விருந்தினராக கலந்துக்கொண்டு உரையாற்றினார்.

“விரதம் என்பது மனதை வழிப்படுத்துகின்ற ஒரு விடயமாக மாத்திரமன்றி உடல் ஆரோக்கியத்திற்கும் முக்கியமான விடயமாக மருத்துவ ஆராய்ச்சிகள் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது. அந்தவகையில் மதத்திற்காக ஒருவர் தன்னை தயார்ப்படுத்தும் அதேசந்தர்ப்பத்தில் மனதை தூய்மைப்படுத்துவதோடு உடலையும் தூய்மைப்படுத்திக் கொள்ளும் ஒரு நுட்பமாக இந்த விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது.

அனைத்து சமயங்களுமே சமூகத்துக்கு தேவையான விழுமியங்களை, கோட்பாடுகளை, சமுதாய நலன்களை, சமூக நீதியை, வாழ்க்கை கோட்பாடுகளை எடுத்துக் கூறுகின்றன. சமூகவியலாளர்களின் கருத்தின்படி மனிதன் ஒரு சமூக விலங்காக கருதப்படுகின்றான். அவ்வாறான மனிதனை  வழிப்படுத்தும் கருவியாக மதங்கள் காணப்படுகின்றன. எனினும், மதங்களின் பெயரால் ஒருவருக்கு ஒருவர் அடித்துக் கொள்வதும், துன்புறுத்திக் கொள்வதும், மனிதநேயமற்ற செயற்பாடுகளில் ஈடுபடுவதும் வேதனை அளிக்கக்கூடிய விடயங்களாகும். ஆன்மீகம் என்ற அற்புதமான விடயத்தை உலகில் பல நாடுகளில் தவறாக பயன்படுத்தி வருகின்றன. இந்நிலையில் வடக்கு மாகாணத்தில் வசிக்கும் மக்களிடையே இன, மத நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கௌரவ ஜனாதிபதி பணித்துள்ளார். அதற்கமைய, வடக்கு மாகாணத்திலுள்ள மதத் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளதுடன், அடுத்தக்கட்ட கலந்துரையாடலை விரைவில் நடத்த திட்டமிட்டுள்ளோம். மத நல்லிணக்கம் என்பது மதத் தலைவர்களிடம் மாத்திரமின்றி மதங்களை பின்பற்றும் அனைத்து நபர்களிடமும் ஏற்பட வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு.’’

வடக்கு மாகாண கௌரவ ஆளுநரின் உரையினை தொடர்ந்து, புனித அல்குர்ஆன் தமிழ் மொழிபெயர்ப்பு பிரதி வழங்கிவைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து மஃரிப் தொழுகைக்கான அதான் ஒலிக்கப்பட்டதன் பின்னர் இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வில் வடக்கு மாகாண பிரதம செயலாளர் திரு.இ.இளங்கோவன், கல்வி அமைச்சின் செயலாளர் திரு.பற்றிக் டிறஞ்சன் உள்ளிட்ட அரச அதிகாரிகளும் கலந்துக்கொண்டனர்.