வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும் மயிலிட்டி கிராமிய அபிவிருத்திச் சங்கத்தினருக்கும் இடையிலான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் புதன்கிழமை காலை (29.01.2025) இடம்பெற்றது.
இதன்போது மயிலிட்டி கிராமிய அபிவிருத்திச் சங்கத்தினரால் வடக்கு மாகாண ஆளுநரிடம் மனுவொன்றும் கையளிக்கப்பட்டது.
அந்த மனுவில், ஜே/246 கிராம அலுவலர் பிரிவில் ¾ பங்கு விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், ஜே/251 கிராம அலுவலர் பிரிவில் ¼ பங்கு விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், ஜே/248 முற்றாக விடுவிக்கப்படாத நிலைமை காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
விடுவிக்கப்படாத பகுதிகளில் உடனடியாகக் குடியேறுவதற்கு 550 குடும்பங்கள் தயாராக இருப்பதாகவும், தற்போது இந்தக் குடும்பங்கள் இடம்பெயர்ந்து வாடகை வீடுகளிலும், உறவினர் மற்றும் நண்பர்கள் வீடுகளிலும் வசித்து வருவதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மக்களின் பிரதான வாழ்வாதாரமான மீன்பிடியை முன்னெடுக்க முடியாத சூழல் நிலவுவதாகவும், தமது காணிகளை விடுவித்து தருவதன் ஊடாக வாழ்வதற்கு வழி செய்து தருமாறும் மனுவில் கோரியுள்ளனர். சொந்த இடத்திலிருந்து இடம்பெயர்ந்து 25 வருடங்கள் கடந்துள்ளமையை கருத்திலெடுத்து தமது மீள்குடியமர்வை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
இது தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்புக்களுடன் ஏற்கனவே பேச்சுக்கள் நடத்தியுள்ளதாகக் குறிப்பிட்ட ஆளுநர், தொடர்ந்தும் இதற்கான முயற்சிகளை முன்னெடுப்பதாகவும் பதிலளித்தார்.