வடக்கு மாகாணத்தில் 2025ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களுக்குமான வாக்குப்பணக்கணக்கில் (vote on account) முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம்

வடக்கு மாகாணத்தில் 2025ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களுக்குமான வாக்குப்பணக்கணக்கில் (vote on account) முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை காலை (18.02.2025) இடம்பெற்றது.
வடக்கு மாகாண நிதியும் திட்டமிடலும், சட்டமும் ஒழுங்கும், காணி, மின்சக்தி, வீடமைப்பும் நிர்மாணமும், சுற்றுலா, உள்ளூராட்சி, மாகாண நிர்வாகம், கிராம அபிவிருத்தி, வீதி அபிவிருத்தி, மோட்டார் போக்குவரத்து மற்றும் போக்குவரத்து அமைச்சின் செயலாளர் செ.பிரணவநாதன் தலைமையில் அந்த அமைச்சின் கீழான திணைக்களங்களின் தலைவர்களும் முதலாவது மீளாய்வுக் கூட்டத்தில் பங்கேற்றனர். வீதி அபிவிருத்தித் திணைக்களம் மற்றும் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் அலுவலகம் என்பவற்றின் கீழ் முன்னெடுக்கப்படவுள்ள வீதி வேலைகள் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது. காலதாமதமின்றி வேலைகளை ஆரம்பிப்பதற்கான அறிவுறுத்தல்களும் ஆளுநரால் வழங்கப்பட்டது.
கல்வி மற்றும் சுகாதார அமைச்சுக்கள் தவிர்ந்த ஏனைய அமைச்சுக்கள் கூடுதலாக வாழ்வாதார மேம்பாட்டுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்வது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என ஆளுநர் ஆலோசனை வழங்கினார்.
இதன் பின்னர், வடக்கு மாகாண மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல், சமூக சேவைகள், கூட்டுறவு, உணவு வழங்கலும் விநியோகமும் மற்றும் தொழிற்துறையும் தொழில் முனைவோர் மேம்பாடும் மற்றும் வர்த்தக வாணிப அமைச்சின் செயலர் பொ.வாகீசன் மற்றும் வடக்கு மாகாண சுகாதார, சுதேச மருத்துவ, நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் அமைச்சின் செயலர் திருமதி ப.ஜெயராணி ஆகியோர் தலைமையிலான திணைக்களத் தலைவர்களின் பங்கேற்புடன் மீளாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
ஒவ்வொரு திட்டங்கள் தொடர்பிலும் அந்தத் திட்டங்கள் முன்மொழியப்பட்டதன் நோக்கங்கள் தொடர்பிலும் ஆளுநர் கேள்விகளை எழுப்பியதுடன், அவை தொடர்பான சாத்தியப்பாடுகள் தொடர்பிலும் கேள்வி எழுப்பினார்.
நெல் கொள்வனவுக்கு பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கங்களுக்கு நிதி விடுவிக்கப்பட்டிருந்த நிலையில் அந்த நிதியில் நெல் கொள்வனவு மேற்கொள்ளப்பட்டதா என்பது தொடர்பிலும் ஆளுநர் கேட்டறிந்து கொண்டார். நெல்லைக் கொள்வனவு செய்யாவிடின் நிதியை மீளப் பெற்றுக்கொள்ளுமாறும் அறிவுறுத்தல் வழங்கினார். வடக்கில் போதியளவு நெல்லை பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் கொள்வனவு செய்து வைத்திருந்தால் மாத்திரமே அரிசி விலையை தளம்பலின்றி பேண முடியும் எனவும் ஆளுநர் குறிப்பிட்டார்.
அதனைத் தொடர்ந்து வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை இளைஞர் விவகார அமைச்சின் செயலர் ம.பற்றிக் டிறஞ்சன் தலைமையில் திணைக்களத் தலைவர்கள் பங்கேற்ற மீளாய்வுக் கூட்டம் நடைபெற்றது. கல்வி அமைச்சு கடந்த காலங்களில் கட்டப்பட்டு முழுமைப்படுத்தப்படாத கட்டடங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கியுள்ளமை சுட்டிக்காட்டப்பட்டது. மேலும் ஆசிரிய இடமாற்றங்கள் எதிர்வரும் ஏப்ரலில் இருந்து நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கப்படுவதாக கல்வி அமைச்சின் செயலர் ஆளுநருக்கு தெரியப்படுத்தினார்.
வடக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைகளுக்கான பரீட்சைகளை மாகாண கல்வித் திணைக்களம் பொறுப்பெடுத்து நடத்துவது தொடர்பாகவும் இதன்போது ஆராயப்பட்டது. மேலும் தொண்டைமனாறு வெளிக்கள நிலையம், வட இலங்கை சங்கீத சபை தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
இறுதியாக, விவசாய மற்றும் கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசன, மீன்பிடி, நீர் விநியோக மற்றும் சுற்றாடல் அமைச்சின் செயலர் ஆ.சிறி தலைமையில் திணைக்களத் தலைவர்கள் பங்கேற்ற மீளாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதன்போது விவசாயத் திணைக்களத்தால் முன்வைக்கப்பட்ட சில திட்டங்களை மாற்றுவதற்கான பரிந்துரைகளை ஆளுநர் முன்வைத்தார்.
மேலும், வடக்கு மாகாணத்துக்கு கடந்த காலங்களைவிட அதிகளவான நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் இந்த நிதி திரும்பிச் செல்லுமாக இருந்தால் மக்கள் எங்களை மன்னிக்க மாட்டார்கள் எனச் சுட்டிக்காட்டிய ஆளுநர், அவ்வாறான நிலைமை ஏற்பட்டால் எதிர்காலத்தில் அரசாங்கத்தாலும் வடக்கு மாகாணத்துக்கு அதிக நிதி விடுவிக்கப்பட மாட்டாது என்பதைக் கவனத்திலெடுத்து அதிகாரிகள் செயற்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.