வடக்கு மாகாணத்தில் வேகமாகப் பரவிவரும் வெள்ளை ஈ தாக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தென்னை பயிர்ச் செய்கை சபையின் தலைவர் மருத்துவர் சுனிமலை வலியுறுத்தியதுடன், வடக்கில் புதிதாக தென்னை பயிர்ச் செய்கை வலயத்தை ஆரம்பிப்பதற்கான முழுமையான ஒத்துழைப்பும் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்
வடக்கு மாகாணத்துக்கு வருகை தந்த தென்னை பயிர்ச் செய்கை சபையின் தலைவர் மருத்துவர் சுனிமல், தென்னை பயிர்ச் செய்கை சபையின் பொதுமுகாமையாளர் விஜயசிங்க ஆகியோர் தலைமையிலான குழுவினர் வடக்கு மாகாண ஆளுநரை, ஆளுநர் செயலகத்தில் திங்கட் கிழமை மாலை (10.02.2025) சந்தித்துக் கலந்துரையாடினர்.
பொருத்தமான தருணத்தில் தென்னை பயிர்ச் செய்கை சபையின் தலைவரது வருகை அமைந்துள்ளதாகக் குறிப்பிட்ட ஆளுநர், வடக்கில் மிக மோசமான பாதிப்பை வெள்ளை ஈ ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்தார். கடந்த ஆண்டு வெள்ளை ஈ தாக்கம் மோசமாக இருந்ததாகவும் பின்னர் அது இல்லாமல் போயிருந்ததாகவும் தற்போது மீண்டும் வேகமாகப் பரவி வருவதாகவும் சுட்டிக்காட்டிய ஆளுநர் அதனை வேகமாகக் கட்டுப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த தென்னை பயிர்ச் செய்கை சபையின் தலைவர், தென்னை பயிர்ச்செய்கை பல்வேறு காரணிகளால் பாதிக்கப்படுவதாகவும் தற்போது வெள்ளை ஈ தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டதுடன் அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பிலும் விவரித்தார். அத்துடன் வடக்கு மாகாணத்தில் தென்னை முக்கோண வலயத்தை ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாகவும் இந்த ஆண்டு ஒரு மில்லியன் தென்னங் கன்றுகளை 16000 ஏக்கரில் நடுகை செய்வதற்கு திட்டமிடுவதாகவும் அதற்குரிய ஒத்துழைப்புக்களை ஆளுநரிடம் கோரினார்.
புதிய தென்னங்கன்றுகளை நடுகை செய்வதற்கான ஒத்துழைப்புக்களை வழங்கத் தயாராக இருப்பதாகக் குறிப்பிட்ட ஆளுநர், சில இடங்களில் வனவளத் திணைக்களம் மற்றும் வன உயிரிகள் திணைக்களத்தால் காணிகள் அடையாளப்படுத்தப்பட்டு வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளதால் சிக்கல் நிலைமை இருக்கின்றது எனவும் தெளிவுபடுத்தினார்.
வடக்கு மாகாணத்தில் தென்னை பயிர்ச்செய்கைக்கு உரங்கள் பயன்படுத்துவது குறைவு எனக் குறிப்பிட்ட வடக்கு மாகாண பிரதம செயலாளர் இ.இளங்கோவன், இங்கு தென்னை ஆராய்ச்சிச் சபையின் ஓர் அலகினை நிறுவ வேண்டியது அவசியம் எனவும் சுட்டிக்காட்டினார். அதேபோல கலப்பு இன தென்னங்கன்றுகளை இங்கு அறிமுகப்படுத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
அனுமதிக்கப்பட்ட சில வகையான உரங்களைப் பயன்படுத்துவதன் ஊடாகவே தென்னை மரங்கள் நோய் எதிர்ப்பு சக்தியைப் பெறுவதுடன் கூடியளவான உற்பத்தியையும் பெற்றுக் கொள்ள முடியும் என தென்னை பயிர்ச் செய்கை சபையின் தலைவர் தெரிவித்தார். அத்துடன் உரங்களை மானிய விலையில் வழங்குவதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
தென்னை பயிர்ச் செய்கை சபையின் உதவிப் பொது முகாமையாளர் தே.வைகுந்தன், வெள்ளை ஈ தாக்கத்தை பொறிமுறை ரீதியாக கட்டுப்படுத்துவதற்கான உபகரணங்கள் தென்னை பயிர்ச் செய்கை வசம் உள்ளபோதும், ஆளணி பற்றாக்குறை காணப்படுவதாகத் தெரிவித்தார். பாதுகாப்புத் தரப்பினரின் உதவிகளைப் பெற்று வழங்கினால் பரவலாக இதைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையை எடுக்க முடியும் என்றும் குறிப்பிட்டார்.
அதற்கான ஒழுங்குகளை மேற்கொள்வதாக வடக்கு மாகாண ஆளுநர் தெரிவித்தார்.
இந்தச் சந்திப்பில் வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலர் ஆ.சிறீ, வடக்கு மாகாண விவசாயப் பணிப்பாளர் திருமதி சு.செந்தில்குமரன், யாழ்ப்பாண பிரதி விவசாயப் பணிப்பாளர் திருமதி எஸ்.அஞ்சனாதேவி ஆகியோரும் கலந்துகொண்டனர்.



