வடக்கு மாகாணத்தில் வாடகைக்கு அமர்த்தப்பட்டு சேவையில் ஈடுபடும் பேருந்துகளை ஒழுங்குபடுத்துவதற்காக கொள்கை ஆவணத்தை உடனடியாகத் தயாரிக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் பணிப்பு

வடக்கு மாகாணத்தில் வாடகைக்கு அமர்த்தப்பட்டு சேவையில் ஈடுபடும் பேருந்துகளை ஒழுங்குபடுத்துவதற்காக கொள்கை ஆவணத்தை உடனடியாகத் தயாரிக்குமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள், வடக்கு மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் மற்றும் பொதுமுகாமையாளர் ஆகியோரைப் பணித்துள்ளார்.
வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று வியாழக்கிழமை காலை (20.02.2025) வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில் விசேட கலந்துரையாடல் நடைபெற்றது.
இந்தக் கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த ஆளுநர், கௌரவ ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டமையைப்போன்றும், ஏற்கனவே ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் எட்டப்பட்ட தீர்மானத்துக்கு அமைவாக இலங்கை போக்குவரத்துச் சபையும், தனியார் பேருந்துகளும் இணைந்த நேர அட்டவணையிலேயே சேவையில் ஈடுபடவேண்டும் என்று குறிப்பிட்டார். இதை இறுக்கமாக நடைமுறைப்படுத்துமாறு ஆளுநர் குறிப்பிட்டார். அதை முழுமையாக நடைமுறைப்படுத்த முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் குறிப்பிட்டார்.
அதேபோல நீண்டதூர பேருந்து நிலையத்திலிருந்தே சேவைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்று ஏற்கனவே எடுக்கப்பட்ட தீர்மானத்தில் மாற்றமில்லை எனக்குறிப்பிட்ட ஆளுநர் அதிலிருந்து பின்வாங்கப்போவதில்லை எனவும் இது தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் ஒழுங்குமுறையாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அறிவித்தார்.
தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்துச் சபை என இரு தரப்புக்களும் ஒழுக்கமாகச் செயற்படவேண்டும் என வலியுறுத்திய ஆளுநர் அதை மீறும் பட்சத்தில் தயவுதாட்சணியமின்றி நடவடிக்கை எடுக்குமாறு அதிகார சபையின் தலைவர் மற்றும் பொலிஸாருக்குப் பணித்தார்.
மேலும் அரசாங்கத்தின் கொள்கையாகவுள்ள இலத்திரனியல்மயப்படுத்தலை மேற்கொள்ளவேண்டியுள்ள தேவையுள்ளதாகக் குறிப்பிட்ட ஆளுநர், ஏனைய மாகாணங்களில் உள்ளதைப்போன்று இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் தனியார் பேருந்துகளில் ஜி.பி.எஸ். கருவிகள் பொருத்தப்பட்டு அவர்களது வழித்தடம் கண்காணிக்கப்பட வேண்டும் எனவும் இதை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை உரியமுறையில் மத்திய அமைச்சுக்கு அறிவித்து மேற்கொள்ளவேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
இலங்கை போக்குவரத்துச் சபையும் அரசாங்கத்தின் ஓர் அங்கம் எனக் குறிப்பிட்ட யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர், ஒழுங்குமுறைகளை அவர்கள் நிச்சயம் பின்பற்றியாகவேண்டும் எனக் குறிப்பிட்டார்.
வடக்கு மாகாணத்தில் அண்மைக்காலமாக அரசாங்கப் பணியாளர்கள் தனியார் பேருந்துகளை வாடகைக்கு அமர்த்தி தூர இடங்களுக்கு தொடர்ச்சியாக பயணிப்பதன் காரணமாக தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக வட இலங்கை தனியார் போக்குவரத்து ஒன்றியப் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர்.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த அதிகார சபையின் தலைவர் இது தொடர்பில் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாகவும் விரிவாகவும் ஆளுநருக்கு தெரியப்படுத்தினார். சட்ட ஏற்பாடுகள் தொடர்பில் அமைச்சின் மூத்த உதவிச் செயலர் விளக்கமளித்தார். இதனடிப்படையில் இவ்வாறான செயற்பாடுகளை உடனடியாக ஒழுங்குமுறைப்படுத்துவதற்காக கொள்கை ஆவணத்தை தயாரித்து வழங்குமாறும், ஏனைய மாகாணங்களில் பின்பற்றப்படும் நடைமுறைகளையும் கண்டறியுமாறும் பணித்தார். அதற்கு அமைவாக எதிர்காலத்தில் நடவடிக்கைகளை எடுக்குமாறும் பொலிஸாரை அறிவுறுத்தினார்.
அதேநேரம், அரச பணியாளர்கள் வழமையான வழித்தட பேருந்துகளில் பயணிக்காது அதிக கட்டணம் செலுத்தி வாடகை அடிப்படையில் பேருந்துகளை அமர்த்தி பயணிப்பதற்கான காரணங்களைக் கண்டறியுமாறும் குறிப்பிட்ட ஆளுநர் அதற்கேற்ற வகையில் தனியாரும் தங்கள் சேவைகளை மேம்படுத்த வேண்டும் எனவும் சுட்டிக்காட்டினார். அத்துடன் அரச பணியாளர்கள் தற்போது வாடகைக்கு பேருந்தை அமர்த்தி பயணிக்கும் வழித்தடங்களில் உடனடியாக பேருந்து சேவைகளை அதிகரித்து நடத்துமாறும் ஆளுநர் பணித்தார்.
இதேவேளை, சிறிய ரக தனியார் பேருந்துகளை எதிர்காலத்தில் சேவையில் நிறுத்தவேண்டிய நிலைமை காணப்படுவதாக ஆளுநர் குறிப்பிட்டார். குறிப்பாக இவ்வாறான பேருந்துகளில் பயணிகள் அசௌகரியத்துடன் பயணிக்கவேண்டிய நிலைமை காணப்படுவதால் குறித்த காலப் பகுதிக்குள் பேருந்துகளை மாற்றுவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஆளுநர் தெரிவித்தார். இதற்காக அத்தகைய பேருந்து உரிமையாளர்களுக்கு கடன் வசதிகளைப் பெற்றுக் கொடுப்பது உதவியாக இருக்கும் எனவும் ஆலோசனை முன்வைக்கப்பட்டது.
இந்தச் சந்திப்பில், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் மு.நந்தகோபாலன், வடக்கு மாகாண ஆளுநரின் இணைப்புச் செயலாளர் எந்திரி சு.ராஜேந்திரா, வடக்கு மாகாண நிதியும் திட்டமிடலும், சட்டமும் ஒழுங்கும், காணி, மின்சக்தி, வீடமைப்பும் நிர்மாணமும், சுற்றுலா, உள்ளூராட்சி, மாகாண நிர்வாகம், கிராம அபிவிருத்தி, வீதி அபிவிருத்தி, மோட்டார் போக்குவரத்து மற்றும் போக்குவரத்து அமைச்சின் செயலர் செ.பிரணவநாதன், அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலர் இ.குருபரன், வடக்கு மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் க.மகேஸ்வரன், பொதுமுகாமையாளர் ப.ஜெயராஜ், யாழ்ப்பாண மாவட்ட பிரதிப்பொலிஸ்மா அதிபர் காளிங்க ஜெயசிங்க, வட இலங்கை தனியார் போக்குவரத்து ஒன்றியத் தலைவர் சிவபரன் ஆகியோர் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றனர்.