வடக்கு மாகாணத்தில் ஆசிரிய வளப் பங்கீடு சரியான முறையில் நடைபெறவில்லை – வட மாகாண ஆளுநர்

வடக்கு மாகாணத்தில் ஆசிரிய வளப் பங்கீடு சரியான முறையில் நடைபெறவில்லை எனச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள், ஆசிரிய தொழிற்சங்கங்கள் மற்றும் கல்வி அமைச்சின் சகல அதிகாரிகளையும் இணைத்து அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் கலந்துரையாடல் நடத்தி இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார்.

இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும், வடக்கு மாகாண ஆளுநருக்கும் இடையிலான சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை மாலை (24.12.2024) இடம்பெற்றது.
வடக்கு மாகாணத்தில் கடந்த காலங்களில் இடம்பெற்ற முறையற்ற இடமாற்றங்கள் மற்றும் முறைகேடுகள் தொடர்பில் ஆசிரியர் சங்கத்தின் பிரதிநிதிகள் ஆளுநருக்கு தெரியப்படுத்தினர். இடமாற்றங்கள் பெயரளவுக்கே இடம்பெற்றன என்பதைச் சுட்டிக்காட்டிய அவர்கள் ஆசிரிய ஆலோசகர்களுக்கான இடமாற்றங்கள் பல ஆண்டுகளாக நடைபெறவில்லை என்றும் குறிப்பிட்டனர். வடக்கு மாகாணத்தின் முன்பள்ளிக் கல்வி தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும் எனக் கோரியதுடன், ஆசிரியர்களுக்கு தற்போதைய காலத்துக்கு ஏற்ற வகையிலான பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டனர்.
இது தொடர்பாக இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கத்தால் கோரிக்கை கடிதம் ஒன்று ஆளுநரிடம் ஒப்படைக்கப்பட்டது.