வடக்கு மாகாணத்தின் சுற்றுலா மேம்பாட்டுக்காக போக்குவரத்து வசதிகளை விரைவுபடுத்தி – விரிவாக்கும் நடவடிக்கைகளை இந்தியா விரைந்து முன்னெடுக்கும் என நம்புவதாக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.

வடக்கு மாகாண சுற்றுலாத்துறை பணியகத்தால் வடக்கு மாகாணத்தின் சுற்றுலா மேம்பாட்டுக்கான காணொலி வெளியீடு மற்றும் சிவாலயங்களின் வழித்தடம் கைநூல் வெளியீடு என்பன வடக்கு மாகாண பிரதம செயலக கேட்போர் கூடத்தில் சனிக்கிழமை மாலை (28.12.2024) இடம்பெற்றது.
வடக்கு மாகாணத்தின் 5 மாவட்டங்களினதும் தனித்துவங்களை உள்ளடக்கி தனித்தனியான காணொலி மற்றும் மாகாணத்தின் ஈர்ப்புள்ள ஒவ்வொரு துறைகள் தொடர்பான காணொலி என்பன வடக்கு மாகாண ஆளுநரால் வெளியிட்டு வைக்கப்பட்டது. தொடர்ந்து வடக்கிலுள்ள முக்கிய 27 சிவாலயங்கள் தொடர்பான விரிவான தகவல்கள் தொகுக்கப்பட்டு அவை வெளியிட்டு வைக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட வடக்கு ஆளுநர் தனது உரையில், கடந்த கால நாட்டு நிலைமை காரணமாக எமது பல்வேறு தொழிற்துறைகள் அழிவடைந்தன. அவற்றில் முக்கியமானது சுற்றுலாத்துறை. சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கு பிரதானமானது போக்குவரத்து. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு வருவதற்கு அண்ணளவாக 8 மணித்தியாலங்கள் செல்கின்றன. போக்குவரத்தை விரைவுபடுத்துவதன் ஊடாகவே சுற்றுலாத்துறையை வலுவுள்ளதாக்கலாம்.
பலாலியிலுள்ள யாழ்ப்பாணம் சர்வதேச நிலையத்தின் ஓடுபாதை விரிவாக்கப்படுவதன் ஊடாக வேறு நாடுகளின் விமானங்களும் நேரடியாக வரக்கூடிய வாய்ப்பு ஏற்படும். அதேபோன்று காங்கேசன்துறை துறைமுகத்தை நவீனமயப்படுத்தி புனரமைப்பதன் ஊடாகவும் சுற்றுலாத்துறை மேம்பட வாய்ப்புக் கிடைக்கும். இந்தியா இவற்றை மேம்படுத்துவதற்காக எடுத்துள்ள நடவடிக்கைகளை விரைவுபடுத்தும் என நான் நம்புகின்றேன். இதன் ஊடாக எங்களின் சுற்றுலாத்துறை மேம்பட அதன் ஊடாக எமது மக்களின் பொருளாதாரமும் வளம்படும். எமது வடக்கு மாகாணம் சுற்றுலாத்துறைக்கான அத்தனை கூறுகளையும் உள்ளடக்கியிருக்கின்றது. எனவே எல்லாவற்றுக்கும் அடிப்படையாக இருக்கும் போக்குவரத்து வசதிகளை விரைந்து மேம்படுத்த நடவடிக்கை எடுப்போம் என ஆளுநர் வலியுறுத்தினார்.
இந்த நிகழ்வில் யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத்தூதரகத்தின் துணைத்தூதுவர் சிறி சாய்முரளி, வடக்கு மாகாண பிரதம செயலர் இ.இளங்கோவன், வடக்கு மாகாண சுற்றுலா அதிகார சபையின் தலைவர் அ.பத்திநாதன், வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலர் செ.பிரணவநாதன், யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்டங்களின் மாவட்டச் செயலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். சர்வதேச சுற்றுலாதினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றியீட்டியவர்களுக்கான சான்றிதழ்கள் மற்றும் பணப்பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.