வடக்கில் முன்னெடுக்கப்படவுள்ள இலவச வீட்டுத்திட்டம் தொடர்பில் பயனாளர்களின் சந்தேகங்களை தெளிவுப்படுத்துவது அவசியமாகும் என கௌரவ ஆளுநர் தெரிவிப்பு

வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ள இலவச வீட்டுத்திட்டம் தொடர்பில் பயனாளர்களை நேரில் சந்தித்து தெளிவுப்படுத்துவது அவசியமானதொன்று என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்கள் தெரிவித்துள்ளார். இலவச வீட்டுத்திட்டத்தை முன்னெடுக்கும் நிறுவனத்தின் பிரதிதிநிகளுடன் ஆளுநர் செயலகத்தில் நேற்று  (03/04/2024) நடைபெற்ற கூட்டத்தின் போதே கௌரவ ஆளுநர் இதனை தெரிவித்தார்.
சூரிய படலங்கள் பொருத்தப்பட்ட கூரைகளுடன் நிர்மாணிக்க திட்டமிடப்பட்ட இந்த வீட்டுத் திட்டமானது தற்போது சற்று மாற்றப்பட்டு, கூரைகளில் சூரிய படலங்கள் அற்ற வகையில் வீடுகளை நிர்மாணிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. வீடுகளின் கூரைகளில் பொருத்தப்படவிருந்த சூரிய படலங்களை ஒன்று சேர்த்து, அரச காணிகளில் சூரிய படல பூங்காக்களை நிர்மாணிக்கும் வகையில் திட்டம் மாற்றப்பட்டுள்ளது. எனினும், தெரிவு செய்யப்பட்டுள்ள பயனாளர்களுக்கான இலவச வீடுகள் நிர்மாணித்து வழங்கப்படும் என திட்டத்தை முன்னெடுத்துள்ள நிறுவனம் அறிவித்துள்ளது.
அதற்கமைய, இதுவரை 31 ஆயிரத்து 730 பயனாளர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கான வீட்டுத்திட்டத்தை வெகு விரைவில் பூர்த்தி செய்யுமாறு கௌரவ ஜனாதிபதி தமது நிறுவனத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளதாகவும் இன்றைய கூட்டத்தின் போது அவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் இறுதியாக நடைபெற்ற யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, நெடுத்தீவு மக்களையும் புதிய வீட்டுத்திட்டத்திற்குள் உள்வாங்குமாறு கௌரவ ஆளுநர் குறித்த நிறுவனத்திடம் கோரினார். அவர்களுக்கான சூரிய படலங்களை பொருத்துவதற்கு தேவையான காணிகளை ஒதுக்கி தருவதாகவும் கௌரவ ஆளுநர் தெரிவித்தார்.
இந்த வீடமைப்பு திட்டத்துடன் இணைந்ததாக பூநகரி குளத்திற்கு அருகில் சூரிய படல பூங்காக்களை நிர்மாணிப்பதற்கான வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதற்கான சுற்றாடல் தொடர்பான கள ஆய்வு இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக சூரிய படல திட்டத்தை முன்னெடுக்கும் நிறுவனம் கூறியுள்ளது.
வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ள இந்த பாரிய செயற்றிட்டம் தொடர்பில் பயன்பெறவுள்ள அனைத்து தரப்பினர்களுக்கும் கிராம மட்டத்தில் சந்திப்புக்களை ஏற்படுத்தி தெளிவுப்படுத்த வேண்டும் என கௌரவ ஆளுநர் கூறினார். இதனூடாக புதிய வீடமைப்பு திட்டம் தொடர்பில் மக்களிடம் காணப்படும் சந்தேகங்களை குறித்த நிறுவனம் தீர்க்க வேண்டும் என கூறிய கௌரவ ஆளுநர், மக்கள் சந்திப்புக்கு தேவையான முழு ஒத்துழைப்புகளையும் வழங்குமாறு வடக்கு மாகாண பிரதம செயலாளர் திரு இ.இளங்கோவன் அவர்களுக்கு பணிப்புரை விடுத்தார்.