வடக்கில் இராணுவத்தின் கைவசமிருந்த மேலுமொரு தொகுதி காணிகள் மக்களிடம் கையளிப்பு

வவுனியா மாவட்டத்தில் இதுவரை காலமும்  இராணுவ கட்டுப்பாட்டிலிருந்த அரச மற்றும் தனியார் காணிகளின் மேலுமொரு தொகுதி இராணுவத்தினால் மக்களிடம் மீண்டும் கையளிக்கப்பட்டுள்ளது. இந்த காணிகளை கையளிக்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களின் தலைமையில்22 ஜனவரி 2019 அன்று  வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது.

வன்னி இராணுவ கட்டளை தலைமையகத்தினை பிரதிநிதித்துவம் செய்து 56ஆவது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரபாத் தெமட்டன்பிட்டிய அவர்கள் காணிவிடுவிப்பிற்கான பத்திரத்தை கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவர் அவர்களிடம் கையளித்தார். கௌரவ ஆளுநர் அவர்கள் அதனை வவுனியா அரச அதிபர் ஐ.எம்.ஹனீபா அவர்களிடம் கையளித்தார்

இதனடிப்படையில் வன்னி இராணுவ கட்டளைத் தலைமையகத்தின் கீழ் வவுனியா மாவட்டத்தில் 40.74 ஏக்கர் அரச காணிகளும் 13.64 ஏக்கர் தனியார் காணிகளும் விடுவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார் மாவட்டங்களில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்து வந்த சுமார் 264 ஏக்கர் தனியார் காணிகளும் இராணுவத்தின் கீழ் இருந்த நான்கு பண்ணைகளுக்கு சொந்தமான 1099 ஏக்கர் அரச காணிகளையும் விடுவிப்பதற்கான சான்றுப் பத்திரங்கள் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவால் முல்லைத்தீவு முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இடம்பெற்ற தேசிய போதைத்தடுப்பு வாரத்தன் ஆரம்ப நிகழ்வில் வைத்து  ஜனாதிபதி அவர்களிடம் கையளிக்கப்பட்டதுடன் அந்தக் காணிகள் கௌரவ வடக்கு ஆளுநர் ஊடாக மாவட்ட செயலாளர்களிடம் கையளிப்பட்டமை குறிப்பிடத்தக்கது.