யாழ் நண்பர்களின் 10ஆவது வருட நிறைவை முன்னிட்டு சமூக பெரியார்களை கௌரவித்து முத்திரைகள் வெளியிடப்பட்டன

யாழ் நண்பர்களின் 10ஆவது வருட நிறைவை முன்னிட்டு யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விடுதி ஒன்றில் நேற்று (19/05/2024) ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வின் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ். எம்.சார்ள்ஸ் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.

சமூக பெரியார்களை கௌரவித்து முத்திரைகள் வெளியிட்டு வைக்கப்பட்ட இந்நிகழ்வில் வட்டூர் இராமநாதன்  புதல்வர்களின் நாதசங்கமம் எனும் நாதஸ்வர தவில் கச்சேரி  இடம்பெற்றது.

“நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த நிகழ்வு அமைந்துள்ளது. தேவைகளுக்கு ஏற்றால் போல மக்களுக்கான சேவைகளும் தேவையாக உள்ளது. ஒரு சமூகம் மீண்டெழுவதற்கான பல தேவைகள் காணப்படுகின்றன. இன்றைய தினம் மதப் பெரியார்கள், கல்வியியலாளர்கள், கலைத்துறை சார்ந்தவர்கள் என அனைத்து தரப்பினரும் கௌரவிக்கப்பட்டமை சிறப்பான நல்லிணக்க செயற்பாடாகும். எமது செயற்பாடுகளுக்கு அயல் நாடாகிய இந்தியா பல வழிகளிலும் தன்னுடைய ஒத்துழைப்பை வழங்கி வருகின்றது. அதேபோல எதிர்வரும் 24ஆம் திகதி தொடக்கம் 26 ஆம் திகதி வரை வடக்கில் பல திட்டங்களை மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்கள் அங்குரார்ப்பணம் செய்து வைக்கவுள்ளார். பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமனங்கள் வழங்கப்படவுள்ளன. காணி உரிமங்கள் கையளிக்கப்படவுள்ளன. இவ்வாறாக வடக்கு மாகாண அபிவிருத்திக்கான பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன”

என இதன்போது பிரதம விருந்தினருக்கான உரையை நிகழ்த்திய வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் தெரிவித்தார்.