யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மண்டபத்தை எதிர்வரும் இரண்டு ஆண்டுகளுக்கு நிர்வகிப்பதற்காக உருவாக்கப்படவுள்ள நம்பிக்கை நிதியப் பொறுப்புச் சபை தொடர்பான விசேட உயர்மட்டக் கலந்துரையாடல் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் பங்கேற்புடன் இன்று திங்கட்கிழமை (25.05.2026) நடைபெற்றது.
புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கௌரவ கலாநிதி ஹினிதும சுனில் செனெவி மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் மேன்மைதங்கிய சந்தோஷ; ஜா ஆகியோர் இந்த உயர்மட்டக் கலந்துரையாடலுக்குத் தலைமை தாங்கினர்.
யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மண்டபத்தை யாழ். மாநகர சபை முழுமையாகப் பொறுப்பேற்கும் வரையில், அதனை நிர்வகிப்பதற்காக இணை முகாமைத்துவக் குழு மற்றும் அதன் தொடர்ச்சியாக உப குழுக்கள் உருவாக்கப்பட்டுத் தொடர்ச்சியான கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டு வந்தன. அதன் பெறுபேறாகவே, குறித்த மண்டபத்தை நிர்வகிக்கும் வகையில் இந்த நம்பிக்கை நிதியப் பொறுப்புச் சபையை உருவாக்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டதுடன், இதற்கான சட்ட வரைவு உருவாக்கப்பட்டு உள்ளூராட்சி மட்டம், மாகாணசபை மட்டம் மற்றும் தொடர்புடைய நிரல் அமைச்சு மட்டம் ஆகியனவற்றில் ஆராயப்பட்டு இறுதி வரைவு தயாரிக்கப்பட்டு அந்த வரைவுக்கு இலங்கை அரசாங்கத்தின் அமைச்சரவையும் தனது அனுமதியை வழங்கியுள்ளது.
இந்த நம்பிக்கை நிதியப் பொறுப்புச் சபையில் பதவி வழியிலான உறுப்பினர்களாக யாழ். மாநகர சபையின் ஆணையாளர், வடக்கு மாகாணத்தில் குறித்த துறைக்குப் பொறுப்பான அமைச்சர் (மாகாண சபை இல்லாத சந்தர்ப்பத்தில் ஆளுநர்) மற்றும் நிரல் அமைச்சின் செயலாளர் ஆகியோர் அங்கம் வகிப்பார்கள். இவர்களுடன், யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த கலை, கல்வி, சட்டம் மற்றும் வர்த்தகம் ஆகிய நான்கு துறைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் துறைசார் நிபுணர்கள் நால்வரும் உள்வாங்கப்படவுள்ளனர். இதற்கமைவாக முன்மொழியப்பட்டுள்ள பெயர்களை உள்ளடக்கி உருவாக்கப்படும் இச்சபையானது இரண்டு ஆண்டுகளுக்குச் செயற்படும் எனவும், அதன் பின்னர் கலாசார மண்டபத்தின் முழுமையான நிர்வாகம் யாழ். மாநகர சபையிடம் கையளிக்கப்படும் எனவும் இக்கலந்துரையாடலில் முடிவெடுக்கப்பட்டது.
இதேவேளை, இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்ற யாழ்ப்பாண மாநகர சபையின் மேயர் திருமதி மதிவதனி விவேகானந்தராசா, யாழ். மாநகர சபையின் அமர்வில் குறித்த விடயம் தொடர்பில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தைச் சுட்டிக்காட்டினார். இதனையடுத்து, சட்ட வலுத் தொடர்பில் ஆராய்வதெனவும், அதனைத் தொடர்ந்து அடுத்த மாதத்தில் நம்பிக்கை நிதியப் பொறுப்புச் சபையை உத்தியோகபூர்வமாக ஆரம்பிப்பதெனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கௌரவ கலாநிதி ஹினிதும சுனில் செனெவி மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் மேன்மைதங்கிய சந்தோஷ; ஜா ஆகியோரின் நேரடிப் பங்கேற்புடன் யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மண்டபத்தில் இந்த ஆரம்ப நிகழ்வை நடத்துவதற்கும் இதன்போது இணக்கம் காணப்பட்டது.
இந்த உயர்மட்டக் கலந்துரையாடலில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் மற்றும் யாழ். மாநகர சபை ஆணையாளர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளும் பங்கேற்றிருந்தனர்.




