தூய்மையான இலங்கை செயற்றிட்டத்தின் ஓர் அங்கமாக, யாழ்ப்பாணம் மாநகர சபையின் ஏற்பாட்டில் யாழ். நகரப் பகுதி வர்த்தகர்களுக்கு விழிப்புணர்வூட்டும் நடவடிக்கை திங்கட்கிழமை (03.02.2025) முன்னெடுக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள், யாழ். மாநகர சபை ஆணையாளர் ச.கிருஷ்ணேந்திரன், யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் காளிங்க ஜயசிங்க, யாழ். பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜயமஹா ஆகியோரும் கலந்துகொண்டனர்.
யாழ்ப்பாண நகரிலுள்ள வர்த்தக நிலையங்களின் முன்பாக பொருட்களை வைத்து விற்பனை செய்ய வேண்டாம் எனவும், வர்த்தக நிலையத்தின் முன்பாகவுள்ள வடிகால்களை துப்புரவாக வைத்திருப்பது அந்தந்த வர்த்தக நிலைய உரிமையாளர்களின் பொறுப்பு எனவும் யாழ். மாநகர சபை ஆணையாளர் வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கு சுட்டிக்காட்டினார். வர்த்தக நிலையங்களில் குப்பைகளை சேர்த்து வைக்குமாறும் தினமும் இரு தடவைகள் யாழ். மாநகர சபையால் அவை பெற்றுக்கொள்ளப்படும் என்றும் வர்த்தகர்களுக்கு அறிவுறுத்தினார். அதேபோன்று வர்த்தக நிலையங்களுக்கு முன்பாக வாகனங்களை நிறுத்துவதை அனுமதிக்க வேண்டாம் எனப் பொலிஸார் அறிவுறுத்தினர்.
எதிர்காலத்தில் யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரி வீதியில் கடைகளுக்கு பொருட்களை இறக்குவதற்கான நேரத்தை வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும், நகரின் சில வீதிகளை ஒருவழியாக்குவதற்கும் இதன்போது ஆலோசிக்கப்பட்டது.
மேலும், யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தை சூழவுள்ள பகுதிகளையும் வடக்கு மாகாண ஆளுநர் பார்வையிட்டார். பேருந்து நிலையத்தை சுற்றி உட்புறமாக அமைக்கப்பட்டுள்ள கடைகளை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என ஆளுநர் இதன்போது குறிப்பிட்டார்.
















