“யாழ்ப்பாணம்” என்ற வர்த்தக நாமத்தைப் பாதுகாத்து, சுயதொழில் முயற்சியாளர்களை ஏற்றுமதியாளர்களாக மாற்றுவோம்! – கௌரவ நா.வேதநாயகன் தெரிவித்தார்.

வடக்கு மாகாணத்தின் உள்ளூர் உற்பத்திகளின் தரத்தை உயர்த்தி, சுயதொழில் முயற்சியாளர்களை நேரடி ஏற்றுமதியாளர்களாக மாற்றுவதே அரசாங்கத்தின் பிரதான நோக்கமாகும். அத்துடன், சர்வதேச சந்தையில் போலிப் பொருட்களால் பாதிப்படைந்துள்ள ‘யாழ்ப்பாணம்’ எனும் எமது தனித்துவமான வர்த்தக நாமத்தைப் பாதுகாத்து, எமது உற்பத்திகளைத் தனித்துவத்துடன் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான பொறிமுறைகள் உருவாக்கப்பட்டு வருவதாக வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.

வடக்கு மாகாண தொழிற்துறை திணைக்களத்தின் ஏற்பாட்டில், பெண் சுயதொழில் முயற்சியாளர்களின் கண்காட்சி, தேசிய ஒருமைப்பாட்டு தின நிகழ்வு மற்றும் முயற்சியாளர்களுக்கான சான்றிதழ் வழங்கும் விழா இன்று (23.12.2025) வைபவரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்ட போதே ஆளுநர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

நிகழ்வில் உரையாற்றிய ஆளுநர், நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதில் ஏற்றுமதியை ஊக்குவிப்பதே அரசாங்கத்தின் தற்போதைய பிரதான கொள்கையாகும். இதற்காக நாடு தழுவிய ரீதியில் 1,000 கூட்டுறவு உற்பத்தியாளர் சங்கங்களை ஸ்தாபிக்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. வடக்கிலும் உற்பத்தியாளர்களை ஒன்றிணைத்து, இச்சங்கங்களை அமைப்பதன் ஊடாக உற்பத்தித் திறனை அதிகரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன’ என்றார்.

மேலும், புதிதாக உருவாக்கப்பட்ட வடமாகாண ஏற்றுமதியாளர் சங்கம் ஊடாக, உள்ளூர் உற்பத்தியாளர்கள் தமது பொருட்களை புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வசிப்பவர்கள் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ ஏற்றுமதி செய்வதற்கான கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

உலகச் சந்தையில் ‘யாழ்ப்பாணம்’ என்ற பெயரில் வேறு நாடுகளில் இருந்து வரும் தரமற்ற பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை அறிய முடிகிறது. இது எமது நற்பெயருக்குப் பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே, எமது உற்பத்திகளுக்கென தனித்துவமான வர்த்தக நாமத்தை உருவாக்கி, அதனை நாமே பயன்படுத்துவதன் மூலமே எமது உற்பத்திகளின் தனித்துவத்தையும் சந்தையையும் பாதுகாக்க முடியும்’ என ஆளுநர் வலியுறுத்தினார்.

சர்வதேச சந்தையை அடைவதற்குப் பொருட்களின் ‘தரம்’ மிக முக்கியமானது. இதனை இலகுபடுத்தும் வகையில், இலங்கை கட்டளைகள் நிறுவனம் (ளுடுளு) மற்றும் வவுனியா பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து செயற்படுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் வடக்கின் உற்பத்தியாளர்கள் தரச் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்வது இனி இலகுவாக்கப்படும் எனவும் ஆளுநர் நம்பிக்கை வெளியிட்டார்.

சிறு தொழில் முயற்சியாளர்கள் நடுத்தர மற்றும் பாரிய தொழிற்சாலைகளை அமைத்து, பலருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நிலைக்கு உயர வேண்டும் என்பதே மாகாண சபையின் எதிர்பார்ப்பு. இம்முயற்சிகள் அனைத்துக்கும் தேவையான நிதியுதவி மற்றும் ஆதரவை வழங்க வடக்கு மாகாண நிர்வாகம் என்றும் தயாராக உள்ளது, என ஆளுநர் உறுதியளித்தார்.

இன்று (23.12.2025) மற்றும் நாளை (24.12.2025) ஆகிய இரு தினங்கள் நடைபெறவுள்ள இக்கண்காட்சியின் தொடக்க நிகழ்வில், கண்காட்சிக் கூடங்கள் திறந்து வைக்கப்பட்டதுடன், தெரிவு செய்யப்பட்ட சிறந்த முயற்சியாளர்களுக்குச் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன. அண்மைக்காலமாகத் தொடர்ச்சியான பயிற்சிகள் மூலம் வடக்கின் உள்ளூர் உற்பத்திகளின் தரம் மற்றும் பொதியிடல் ஆகியவற்றில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளமை கண்கூடாகத் தெரிவதாகவும் ஆளுநர் பாராட்டினார்.

இந்நிகழ்வில் வடக்கு மாகாண பிரதம செயலாளர், மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் மற்றும் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவரின் ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.