எங்களுக்கு அநீதி இழைக்கப்படும்போது நாம் மனதார இறைவனை வேண்டினால் நிச்சயம் எங்களுக்குப் பலன் கிடைக்கும். இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.
பிரம்ம குமாரிகள் இராஜயோக நிலையம் ஏற்பாடு செய்த, மகிமை வாய்ந்த 12 ஜோதிலிங்க குலங்களில் முதன்மையானதாக விளங்கும் குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ள சோமநாதர் ஜோதிலிங்க வழிபாடு நேற்று திங்கட்கிழமை காலை (24.02.2025) யாழ்ப்பாணத்திலுள்ள பிரம்ம குமாரிகள் இராஜயோக நிலையத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் பங்கேற்றார்.
‘மற்றையவர்களுக்கு உதவுவதுதான் ஆண்டவனுக்குச் செய்யும் சேவை. அதன் ஊடாகவே எங்களின் பணிகள் மேன்மையடையும். மனமார நல்ல காரியங்களை நினைக்க வேண்டும். இறைவழிபாட்டால் மனமும் தூய்மையடையும். மனம் தூய்மையடைவதால் எங்கள் சேவைகளும் சிறப்பாக அமையும். பரம்பொருளை எப்போதும் நினைக்க வேண்டும். தியானிக்க வேண்டும். எங்களுடைய மக்கள் எவ்வாறான சேவைகளை எதிர்பார்க்கின்றார்களோ, அவ்வாறான சேவைகளை வழங்குவதற்கு இறைவனின் அருள்தான் மிக முக்கியமானது. எல்லாம் வல்ல பரம்பொருள் மீது நம்பிக்கைவைக்க வேண்டும். எங்கள் மதம் அன்பே சிவம் என்றுதான் சொல்லுகின்றது. எனவே எல்லோரிடமும் அன்பாகவும் இருப்பதுடன், மனதார இறைவனையும் வழிபட்டால் எங்களின் மனமும் சாந்தியடையும். எங்களுக்கு எல்லாம் நன்மை கிடைக்கும்’ என ஆளுநர் இங்கு குறிப்பிட்டார்.
அத்துடன் முல்லைத்தீவு மாவட்டச் செயலராக கடமையாற்றிய காலத்தில் பிரம்மகுமாரிகள் நிலையத்தால் நடத்தப்பட்ட 12 லிங்க வழிபாடுகளில் கலந்துகொண்டுள்ளேன் எனக் குறிப்பிட்ட ஆளுநர், அவர்களால் வழங்கப்பட்ட லிங்கத்தை இப்போதும் வீட்டில் வைத்து வழிபட்டு வருகின்றேன் என்றும் தெரிவித்தார்.