யாழ்ப்பாணத்தின் தனித்துவமான உணவுச் சுவையை ருசிக்க சுற்றுலாவிகளை வரவேற்கின்றோம்; உணவுத் திருவிழா முதலீட்டு வாய்ப்புகளுக்கான அழைப்பாகவும் அமைகின்றது – ஆளுநர்

யாழ்ப்பாணத்துக்கென்று தனித்துவமான உணவும் தனித்துவமான சுவையும் இருக்கின்றன. அந்தத் தனித்துவத்தை ருசிப்பதற்காக சுற்றுலாவிகளை நாம் வரவேற்கின்றோம். அதனை ஊக்குவிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த உணவுத் திருவிழா வெறுமனே ஒரு கொண்டாட்டமாக நின்றுவிடாது, யாழ்ப்பாணத்தின் சுற்றுலாத்துறையில் முதலீடு செய்வதற்கான மறைமுக அழைப்பையும் முதலீட்டாளர்களுக்கு விடுத்து நிற்கின்றது என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

வடக்கு மாகாண சுற்றுலா அபிவிருத்திப் பணியகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘யாழ்ப்பாணத்துக்கு வருகை தாருங்கள் 2026 – கலாசார மற்றும் உணவுத் திருவிழா’ இன்று (15.08.2026) சனிக்கிழமை மாலை யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் சிறப்பாக ஆரம்பமானது. யாழ்ப்பாணத்தின் தனித்துவமான கலாசாரம், பாரம்பரியம், கலை மற்றும் உணவுப் பண்பாட்டை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாவிகளுக்கு அறிமுகப்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இத்திருவிழாவில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஆளுநர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய ஆளுநர், தற்போதைய அரசாங்கத்தின் காலப்பகுதியில் நாட்டின் சுற்றுலாத்துறை படிப்படியாக வளர்ச்சியடைந்து வருவதுடன், சுற்றுலாவிகளின் வருகையும் அதிகரித்து வருவதாகக் குறிப்பிட்டார். இதனுடன், சுற்றுலாத்துறையை அடிப்படையாகக் கொண்ட முதலீடுகளை மேற்கொள்வதற்கும் பலர் ஆர்வம் காட்டி வருவதாக அவர் தெரிவித்தார்.

கடந்த காலங்களில் பல்வேறு தடைகள் மற்றும் சவால்கள் காரணமாக முதலீடு செய்வதற்காக யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த சில முதலீட்டாளர்கள் முதலீடு செய்யாமல் திரும்பிச் சென்ற நிலை காணப்பட்டதாகக் குறிப்பிட்ட ஆளுநர், தற்போது அவ்வாறான தடைகள் படிப்படியாகக் களையப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். எனவே, உருவாகியுள்ள இந்தச் சாதகமான சூழலைப் பயன்படுத்தி மேலும் பல முதலீட்டாளர்கள் வடக்கு மாகாணத்துக்கு வந்து முதலீடு செய்ய முன்வர வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.

யாழ்ப்பாணத்தின் பாரம்பரிய உணவு வகைகளையும் அவற்றின் ஆரோக்கியப் பண்புகளையும் அறிமுகப்படுத்துவதற்கும் இவ்வுணவுத் திருவிழா சிறந்த வாய்ப்பாக அமைகின்றது எனக் குறிப்பிட்ட ஆளுநர், யாழ்ப்பாண உணவுகளின் தனித்துவமான சுவையை அனுபவிக்க விரும்பும் அனைவரையும் வரவேற்பதாகத் தெரிவித்தார்.

காலப்போக்கில் பல பாரம்பரிய உணவு வகைகள் எமது அன்றாட வாழ்விலிருந்து மறைந்து வருவதாகவும், அவற்றை மீண்டும் அறிமுகப்படுத்தவும் புதிய தலைமுறையினருக்கு எடுத்துச் செல்லவும் இவ்வாறான நிகழ்வுகள் உதவுவதாகவும் அவர் குறிப்பிட்டார். எதிர்காலத்தில் மேலும் அதிகளவிலான சுற்றுலாவிகளை யாழ்ப்பாணத்துக்கு ஈர்ப்பதற்கும், யாழ்ப்பாணத்தின் உணவுப் பண்பாட்டை சுற்றுலாத்துறையின் ஒரு முக்கிய வளமாக மேம்படுத்துவதற்கும் இவ்வாறான நிகழ்வுகள் பங்களிக்கும் என்றும் ஆளுநர் தெரிவித்தார்.

மேடை நிகழ்வுகள் ஆரம்பிக்க முன்னதாக, யாழ்ப்பாணம் பொதுநூலக முன்றலில் இருந்து கலாசாரப் பவனியும் பழைய மோட்டார் வாகனங்களின் பவனியும் ஆரம்பமாகின. அவை மருத்துவமனை வீதி, சத்திரசந்தி மற்றும் காங்கேசன்துறை வீதி ஊடாகப் பயணித்து முற்றவெளி மைதானத்தைச் சென்றடைந்தன.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற மேடை நிகழ்வுகளில் யாழ்ப்பாணத்தின் பாரம்பரியத்தையும் கலைப் பண்பாட்டையும் பிரதிபலிக்கும் பல்வேறு கலாசார நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டன. இந்நிகழ்வில் பெருமளவான மக்கள் கலந்துகொண்டு உணவுத் திருவிழாவை சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் கௌரவ அமைச்சர் இ.சந்திரசேகர், கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன் மற்றும் எஸ்.ஸ்ரீபவானந்தராஜா, உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் அ.சோதிநாதன், வடக்கு மாகாண சுற்றுலா அபிவிருத்திப் பணியகத்தின் தலைவர் கலாநிதி ஜே.விவேகானந்தன், பணியக உறுப்பினர்கள், பணிப்பாளர் மற்றும் பணியாளர்கள், தூய்மை இலங்கை செயலணியின் கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளர் ம.மோகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

‘யாழ்ப்பாணத்துக்கு வருகை தாருங்கள் 2026 – கலாசார மற்றும் உணவுத் திருவிழா’ நாளை (16.08.2026) ஞாயிற்றுக்கிழமையும், நாளைமறுதினம் (17.08.2026) திங்கட்கிழமையும் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறவுள்ளது. மாலை நேரங்களில் பல்வேறு கலை மற்றும் கலாசார மேடை நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன.