மூலோபாய நகர அபிவிருத்தி மற்றும் நூறு நகர பல்பரிமாண அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல்

மூலோபாய நகர அபிவிருத்தி மற்றும் நூறு நகர பல்பரிமாண அபிவிருத்தித் திட்டங்களின் தற்போதைய நடைமுறை நிலைமைகளை ஆராயும் கலந்துரையாடல் 27.07.2021 காலை 10 மணிக்கு வடமாகாண ஆளுநர் கௌரவ திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களின் தலைமையில் வட மாகாண ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடலில், மூலோபாய நகர திட்டமிடலில் நிறைவடைந்துள்ள திட்டங்கள் தொடர்பான நிலைமை குறித்தும் குறித்த திட்டத்தை முன் கொண்டு செல்வதற்குத் தேவையான நிதியைப் பெற்றுக் கொள்ள மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும் எடுத்துத்துரைக்கப்பட்டது.

இங்கு கருத்து தெரிவித்த கௌரவ ஆளுநர் அவர்கள், குறித்த திட்டத்தில் பல்வேறுபட்ட திணைக்களங்களும் பங்குதாரர்களும் உள்வாங்கப்பட்டுள்ளதால், இத்திட்டத்தை முன்கொண்டு செல்வதில் எதிர்கொள்ளும் சவால்களை நிவர்த்தி செய்யும் முகமாக குறித்த ஒரு முகாமைத்துவத்தின் கீழ் இத்திட்டத்தை முன் கொண்டு செல்ல ஆலோசனை வழங்கப்பட்டதுடன் குறித்த மூலோபாயத் திட்டத்தை தயாரிக்கும் போது அத்திட்டங்கள் அரசின் கொள்கை திட்டங்களுக்கு அமைவானதாகவும், சூழலுக்கு பொருத்தமானதாகவும் உடனடி வருமானங்களை ஈட்டக் கூடிய அதி முக்கிய திட்டங்களை தயாரிக்கவும் அறிவுறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. மேலும், இவ் அபிவிருத்தி திட்டத்தின் செயற்பாடுகளை முன்னெடுப்பது தொடர்பில் முகாமைத்துவக் குழு ஒன்றை அமைத்து செயற்பாடுகளை முன்கொண்டு செல்வது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது.

குறித்த கலந்துரையாடலில் ஆளுநரின் செயலாளர், ஆளுநரின் உதவிச் செயலாளர், மாவட்ட அரசாங்க அதிபர், நகர அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள் உள்ளிட்ட தரப்பினர் கலந்து கொண்டிருந்தனர்.