மூலோபாய நகர அபிவிருத்தி திட்டம் தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம்

மூலோபாய நகரங்கள் அபிவிருத்தி திட்டத்தின் அடிப்படையில் யாழ் மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் மற்றும் முன்னெடுக்கவேண்டிய அபிவிருத்திகள் தொடர்பிலான மீளாய்வு 12 பெப்பிரவரி 2020 ஆளுநர் திருமதி பி.எஸ்.எம் சார்ள்ஸ் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் உலக வங்கியின் பொறுப்புவாய்ந்த அதிகாரிகள், பாராளுமன்ற உறுப்பினர் திரு அங்கஜன் இராமநாதன், பிரதம செயலாளர் ஏ.பத்திநாதன், யாழ் அரசாங்க அதிபர் ந.வேதநாயகன் ஆளுநரின் செயலாளர் எஸ்.சத்தியசீலன், நகர அபிவிருத்தி சபை உத்தியோகத்தர்கள், குறித்த திட்டங்களோடு தொடர்புடைய திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களின் உயரதிகாரிகள் என பலர் கலந்துகொண்டனர்.
சாலை மற்றும் போக்குவரத்து மேலாண்மை, நகர்ப்புற மேம்பாடு ,கலாச்சார பாரம்பரியம், வீதி அபிவிருத்தி, வடிகாலமைப்பு புனரமைப்பு, கழிவு நீரகற்றல் போன்ற செயற்பாடுகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டன. குளங்கள் புனரமைப்பு செய்யப்படும்போது அதனுடன் தொடர்புடைய வடிகாலமைப்பு பற்றியும் அதிக கவனமெடுக்கவேண்டும் என இங்கு சுட்டிக்காட்டப்பட்டது. திட்ட வரைபுகள், முன்மொழிவுகள் செயற்பாட்டு அறிக்கையிடல், போன்றவை தொடர்பில் அதனுடன் தொடர்புள்ள நிர்வாக தாமதங்கள் உலகவங்கியின் நிதிப்பங்களிப்பை தொடர்ந்து பெற தடையாக இருக்கும் என்றும் அதற்க்காக துரிதமான நடவடிக்கைகளை திணைக்களங்கள் கூட்டாக இணைந்து முன்னெடுக்க வேண்டுமெனவும் குறிப்பிடப்பட்டது.
உலக வங்கியின் நிதி உதவியில் கட்டிமுடிக்கப்பட்ட சில கட்டடங்கள் மிக தாமதமாகவே மக்கள் பாவனைக்கு தரப்பட்டதாகவும் அவற்றில் சில பாவனைக்குப் பின்னரான பராமரிப்பு ஏற்ற முறையில் இல்லையெனவும் ஆளுநரிடம் தெரிவிக்கப்பட்டது.
இதன்போது முன்னெடுக்கப்பட வேண்டிய பல விடயங்கள் தொடர்பில் ஆலோசனை கூறிய ஆளுநர் விரைவுத்தன்மைக்கு தன்னாலான அனைத்து பங்களிப்புகளையும் செய்வதற்கு தயாராக இருப்பதாகவும் நாம் இந்த பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எமது பிரதேசத்தின் அபிவிருத்தி தொடர்பில் பணிக்கு அப்பாலும் அர்ப்பணிப்புடன் செயற்படவேண்டிய தேவை அனைத்து அதிகாரிகளுக்கும் உண்டு என்பதை நினைவுபடுத்தினார்.