மூன்றாம் நபர் தலையீடின்றி உற்பத்தியாளர்களே நேரடியாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதிகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புக்களை எவ்வாறு உருவாக்கலாம் என்பது தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் 14.05.2025 அன்று புதன்கிழமை இடம்பெற்றது.
கூட்டத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய ஆளுநர், வடக்கு மாகாணத்தில் அனைத்து வளங்களும் இருக்கின்றன. ஆனால் அதை உரிய முறையில் பயன்படுத்தவில்லை. வடக்கிலிருந்து சிலர் ஏற்றுமதிகளில் ஈடுபடுகின்றனர். பெரும்பாலானோர் மூன்றாம் தரப்பு ஊடாகவே ஏற்றுமதிகளை முன்னெடுக்கின்றனர். அவர்கள் நேரடியாக ஏற்றுமதியை முன்னெடுக்கக் கூடிய சூழலை உருவாக்கவேண்டும். ஏற்றுமதியுடன் தொடர்புடைய நிறுவனங்களை ஒருங்கிணைந்து இதனைச் செயற்படுத்தவேண்டும் எனக் குறிப்பிட்டார்.
சுங்கத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ரவீந்திரகுமார், சாதாரண விவசாயி ஒருவரும் ஏற்றுமதியாளராகவேண்டும் என்ற நோக்கிலேயே இதைச் செயற்படுத்த முனைவதாகக் குறிப்பிட்டார். ஏற்றுமதி தொடர்பான நீண்ட நடைமுறைகள் காரணமாக சிறு தொழில் முயற்சியாளர்கள் பலர் ஏற்றுமதியைக் கைவிடுகின்றனர் எனச் சுட்டிக்காட்டிய அவர் எதிர்காலத்தில் அவ்வாறான நிலைமை ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்வதே இந்தக் கலந்துரையாடலின் நோக்கம் என்று குறிப்பிட்டார்.
ஏற்றுமதியுடன் தொடர்புடைய அனைத்துத் திணைக்களங்களினதும் பிரதிநிதிகள் வடக்கில் உரிய அதிகாரத்துடன் இருக்கவேண்டும் என்றும் இதற்குரிய அதிகார பரவலாக்கத்துக்கான நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. மேலும், ஏற்றுமதிக்கான சில பரிசோதனைகளை முன்னெடுப்பதற்கான வளங்கள் கொழும்பில் மாத்திரம் உள்ளமையால், அத்தகைய பரிசோதனைகள் யாழ்ப்பாண அல்லது வவுனியா பல்கலைக்கழகத்துடன் இணைந்து முன்னெடுப்பதற்கான சாத்தியங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டது.
ஒரு மாத காலத்தினுள் ஏற்றுமதியுடன் தொடர்புடைய திணைக்களங்களை ஒருங்கிணைத்து அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்வதற்கு இந்தக் கலந்துரையாடலில் முடிவு செய்யப்பட்டது.
இந்தக் கலந்துரையாடலில் ஏற்றுமதியுடன் தொடர்புடைய பல்வேறு நிறுவனங்களின் பிரதிநிதிகளும், வடக்கு மாகாண ஏற்றுமதியாளர் சங்கப் பிரதிநிதிகளும், வர்த்தக சங்கப் பிரதிநிகளும் பங்கேற்றனர்.