முல்லைத்தீவு மாவட்ட துடுப்பாட்ட சங்கத்தால் நடத்தப்பட்ட ‘முல்லை பிரீமியர் லீக்’ இன் இறுதி ஆட்டம் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.

முல்லைத்தீவு மாவட்ட துடுப்பாட்ட சங்கத்தால் நடத்தப்பட்ட ‘முல்லை பிரீமியர் லீக்’ இன் இறுதி ஆட்டம் நேற்று சனிக்கிழமை (08.03.2025) புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
மருத்துவர் க.உதயசீலன் தலைமையில் இடம்பெற்ற இறுதி ஆட்டத்தில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் பிரதம விருந்தினராகவும், புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் ஆர்.விஜயகுமார் சிறப்பு விருந்தினராகவும் கலந்துகொண்டனர்.
இங்கு உரையாற்றிய ஆளுநர், எங்கு ஆர்வம் – விருப்பம் இருக்கின்றதோ அங்கு வெற்றி – முன்னேற்றம் கிடைக்கும். விளையாட்டுக் கழகமாக இருந்தாலென்ன, எந்தவொரு நிறுவனங்களாக இருந்தாலென்ன அந்த உறுப்பினர்களின் ஆர்வத்தில்தான் அதன் வெற்றி தங்கியிருக்கின்றது. முல்லைத்தீவு மாவட்டத்தில் இவ்வாறான பிரீமியர் லீக் நடத்துவது வீரர்களின் திறமைகளை வெளிக்கொண்டுவருவதற்கு மிகவும் உதவும். இந்த நிகழ்வுக்கு தலைமை தாங்கும் மருத்துவர் உதயசீலன் குறிப்பிட்டமையைப்போன்று இந்தப் பிரதேச இளையோருக்காக நிரந்த மைதானம் கிடைக்கப்பெறவேண்டும். ஏனைய மாகாணங்களில் இருப்பதைப்போன்று வளங்களைக் கொண்டதாக அந்த மைதானம் அமையப்பெறவேண்டும்.
இன்றைய காலத்தில் இளையோர்களுக்கு விளையாட்டின் மீதான ஆர்வம் குறைந்து வருகின்றது. முன்னைய காலங்களில் பட்டிதொட்டி எல்லாம் விளையாடிக்கொண்டிருப்பார்கள். இப்போது அப்படிக் காண்பது அரிதாகிச் செல்கின்றது.
இவ்வாறான தொடர்களை நடத்துவதன் ஊடாக திறமையான வீரர்களை இனம்காண முடியும். அவ்வாறான வீரர்களுக்கு மேலும் சிறப்பான பயிற்சிகளை வழங்கி தேசிய ரீதியில் சாதிக்க வைக்கவேண்டும். எனவே இப்படியான தொடர்களை நடத்தும் உங்கள் முயற்சிகளை நான் பாராட்டுகின்றேன், என்று ஆளுநர் தனது உரையில் குறிப்பிட்டார்.