முல்லைத்தீவு மாவட்டத்தில் நீண்ட காலமாக தீர்க்கப்படாதிருந்த சுகாதார மற்றும் போக்குவரத்துப் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் 16.05.2025 அன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஆராயப்பட்ட விடயங்களின் தொடர் நடவடிக்கையாக இந்தக் கூட்டம் நடைபெறுவதாக மாவட்டச் செயலர் அ.உமாமகேஸ்வரன் குறிப்பிட்டார்.
இதன் பின்னர் முல்லைத்தீவு மாவட்டத்தின் சுகாதாரப் பிரச்சினை விரிவாக ஆராயப்பட்டிருந்தது. முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையின் சவால்கள் முதலில் ஆராயப்பட்டது. விடுதி தேவை முதன்மையாக முன்வைக்கப்பட்டது. இதற்கான நிரந்தரத் தீர்வு மற்றும் தற்காகலிகத் தீர்வு அதனுடன் தொடர்புடைய தொடர் நடவடிக்கைகள் ஆராயப்பட்டன. வேறு பல தேவைப்பாடுகள் தொடர்பிலும் அதனைச் சாத்தியமாக அணுகுவதற்கான வழிகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டன. இதனைத் தொடர்ந்து முல்லைத்தீவு மாவட்டத்தின் ஏனைய சுகாதார பிரச்சினைகள் தொடர்பாக ஆராயப்பட்டன. அதன் பின்பு சுதேசத் திணைக்களத்தினர் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் என்பனவற்றால் முன்வைக்கப்பட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டன. இரு தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்த நிலையில், நேர அட்டவணைக்கு அமைவாக குறிக்கப்பட்ட நேரத்தில் பேருந்துகளை இரு தரப்பினரும் இயக்கவேண்டும் எனவும், அது தொடர்பான கண்காணிப்புக்களைத் தீவிரப்படுத்தவேண்டும் என்றும் ஆளுநர் இதன்போது குறிப்பிட்டார்.
இந்தக் கலந்துரையாடலில், முல்லைத்தீவு மாவட்டச் செயலர், சுகாதார அமைச்சின் செயலர், முல்லைத்தீவு மாவட்ட மேலதிக மாவட்டச் செயலர், சுகாதாரப் பணிப்பாளர், சுதேச மருத்துவத் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவமனை அத்தியட்சகர்கள், பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் பொதுமுகாமையாளர், இலங்கை போக்குவரத்துச் சபையினர், தனியார் பேருந்து உரிமையாளர்கள் எனப் பலரும் பங்கேற்றனர்.