முல்லைத்தீவு மாவட்டத்தில் காணப்படும் சிக்கல்களை நிவர்த்திக்கவெளிதரப்பினரின் ஒத்துழைப்பும் அவசியம். – வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் தெரிவிப்பு

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மேம்பாட்டுப் பேரவை மற்றும் புதுக்குடியிருப்பு மேம்பாட்டுப் பேரவை லண்டன் கிளை இணைந்து ஏற்பாடு செய்த புதுவை பண்பாட்டு பெருவிழா நேற்று (06/04/2024) நடைபெற்றது. புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியின் பொன்விழா மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்கள் கலந்துச் சிறப்பித்தார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் நிர்வாக ரீதியாகவும், மக்களின் தேவைகள் தொடர்பாகவும் பல்வேறு சிக்கல்கள் காணப்படுகின்ற நிலையில்  அவற்றுக்கான தீர்வுகளை பெற்றுக் கொடுக்க வேண்டிய பாரிய பொறுப்பு காணப்படுவதாக நிகழ்வில் பிரதம விருந்தினருக்கான உரையை ஆற்றிய போது கௌரவ ஆளுநர் தெரிவித்தார்.

இந்த விடயங்கள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களிடமிருந்தும், சமூக பொது அமைப்புகள் ஊடாகவும் கிடைக்கும் கோரிக்கைகள் தொடர்பில் மிக சாதகமான முறையில் பரிசீலித்து வருவதாகவும் கௌரவ ஆளுநர் கூறினார்.

வடக்கு மாகாணத்தில் ஆசிரியர் இடமாற்றங்களை கோட்டக்கல்வி பணிப்பாளர்களும், வலயக்கல்விப் பணிப்பாளர்களும் மேற்கொண்டு வருவதால், பல பாடசாலைகளில் ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுவதாகவும் கௌரவ ஆளுநர் தெரிவித்தார். இந்த விடயம் தொடர்பில் மாகாண கல்வி அமைச்சுக்கு அறிக்கையிடாமல் காணப்படுவதும் பாரிய ஒரு சிக்கல் நிலையாகவே காணப்படுகின்றது. ஆகவே இந்த விடயம் தொடர்பில் ஆராயுமாறும், உரிய தரவுகளை சேகரிக்குமாறும், பொருத்தமான நடைமுறைகளை பின்பற்றி ஆசிரியர்களை நியமித்து வெற்றிடங்களை பூர்த்தி செய்யுமாறும் கல்வி அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாக கௌரவ ஆளுநர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் பட்டதாரி ஆசிரியர்களை நியமிப்பதற்கான போட்டிப் பரீட்சை நிறைவு பெற்றிருக்கின்ற நிலையில் பெறுபேறுகளின் அடிப்படையில் புதிய ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட உள்ளது.

இதேவேளை, யுத்த காலத்தில் நாட்டிலிருந்து வெளியேறி தற்போது புலம்பெயர் நாடுகளில் வாழ்ந்துக் கொண்டிருக்கும் உறவுகள், தாய் மண்ணுக்கு வருகை தந்து அவர்களுடைய நேரத்தையும், பணத்தையும் செலவு செய்து மக்களுடைய தேவைகளை நிவர்த்தி செய்வது மகிழ்ச்சியளிப்பதாக கௌரவ ஆளுநர் குறிப்பிட்டார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் தேவைகளை நிவர்த்திப்பதற்கு அரச சேவைகள் மாத்திரம் போதுமானதாக இல்லை எனவும், அந்தந்த சமூகத்தில் வாழும் மக்களும், புலம்பெயர் தேசத்தில் வாழும் உறவுகளும் மென்மேலும் ஒன்றிணைந்து அர்ப்பணிப்புடன் செயற்படும் போது, தற்போது காணப்படும் நிலையிலிருந்து மேலும் முன்னேற்றத்தை அடையக்கூடிய சாத்தியம் உள்ளதாகவும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் சுட்டிக்காட்டினார்.