முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை.சோ.சேனாதிராசா அவர்களின் திருவுருவச் சிலை திறந்து வைக்கப்பட்டது

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை.சோ.சேனாதிராசா அவர்கள் பதவி ஆசையற்றவர்;, சலுகைகளுக்கு விலைபோகாதவர். தனக்கென எதனையும் எதிர்பார்க்காது, தமிழ் மக்களின் உரிமைக்காகப் பல ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த மிகச் சிறந்ததொரு மனிதரை நாம் இழந்திருக்கின்றோம் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் முன்னாள் தலைவருமான காலஞ்சென்ற மாவை.சோ.சேனாதிராசா அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, மாவிட்டபுரத்தில் அமைக்கப்பட்ட அன்னாரது திருவுருவச் சிலை வடக்கு மாகாண ஆளுநரால் இன்று சனிக்கிழமை காலை (31.01.2026) செய்து திறந்து வைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, யாழ்ப்பாணம் தந்தை செல்வா அரங்கில் நடைபெற்ற நினைவுப் பேருரை மற்றும் மேடை நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்:

மாவை.சேனாதிராசா அவர்களை எனக்கு எனது 10 வயதிலிருந்தே தெரியும். அவர் எனது தந்தையாரைச் சந்திப்பதற்காக அடிக்கடி எமது வீட்டுக்கு வருவார். நாங்கள் உயர்தரம் படித்துக் கொண்டிருந்த காலத்தில், எங்களைப் போன்ற இளையோருக்கு அரசியல் வகுப்புகளை நடாத்திய ஆசானாகவும் அவர் திகழ்ந்தார்.

நான் பிரதேச செயலாளராகவும், பின்னர் மாவட்டச் செயலாளராகவும் பணியாற்றிய காலங்களில் அவர் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகித்தார். அதிகாரத்தில் இருந்தாலும் அவர் மிகவும் எளிமையானவராகவே வாழ்ந்தார். அவரை எந்த நேரத்திலும், எவரும் இலகுவாகச் சந்திக்க முடியும் என்ற நிலை இருந்தது.

அவர் பதவி ஆசை இல்லாதவர். சலுகைகளுக்கு ஒருபோதும் விலைபோகாதவர். தனக்காகவோ, தன் குடும்பத்துக்காகவோ எந்தவொரு சலுகையையும் அவர் எதிர்பார்த்ததில்லை. இன்றைய அரசியல் சூழலில் அவர் மிக வித்தியாசமான ஒரு மனிதராகவே வாழ்ந்து மறைந்துள்ளார்.

அவர் ஒரு அப்பாவியான மனிதர். அவரிடம் உதவி கேட்டு வரும் யாருக்கும் ‘மாட்டேன்’ என்று சொல்லும் துணிவு அவருக்கு இருந்ததில்லை. அவரிடமிருந்து எப்போதும் எதிர்மறையான பதில்கள் வராது. அந்தளவவுக்கு அவர் மென்மையான உள்ளம் கொண்டவர். தமிழ் மக்களின் உரிமைகளுக்காகத் தனது இளமைக் காலத்தைத் தியாகம் செய்து, பல வருடங்கள் சிறையில் வாடியவர். இத்தகையதொரு சிறந்த தலைவரை இழந்தமை எமது சமூகத்துக்குப் பேரிழப்பாகும், என்றார்.

மாவை.சோ.சேனாதிராவின் முதலாமாண்டு நினைவு மலரும், பேராசிரியர் பஞ்.இராமலிங்கம் எழுதிய ஈழ அண்ணல் மாவை.சோ.சேனாதிராசா என்னும் நூலுமாக இரண்டு நூல்கள் இதன்போது வெளியிட்டு வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் தமிழக முன்னாள் அமைச்சர் ந.நல்லுசாமி, யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத்தூதரகத்தின் கொன்சியூலர் ஜெனரல் சாய்முரளி, நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், மதத் தலைவர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள், தமிழகம் மற்றும் புலம்பெயர் தேசங்களிலிருந்தும் பெருமளவானோர் கலந்து கொண்டனர்.