வடமாகாண முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சி நிலையத்தில் பெறுகைகள் மற்றும் நிர்வாக முகாமைத்துவ கற்கை நெறியை பூர்த்தி செய்த அரச சேவையிலுள்ள உத்தியோகத்தர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 20.01.2021 அன்று காலை 11 மணியளவில் யாழ்ப்பாண பொது நூலக மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட வடமாகாண ஆளுநர் கௌரவ திருமதி பி.எஸ்.எம். சாள்ஸ் அவர்கள், நான்காவது அணியினராக கற்கை நெறியை பூர்த்தி செய்த அரச உத்தியோகத்தர்களுக்கான சான்றிதழ்களை வழங்கி சிறப்பித்தார். தொடர்ந்து சான்றிதழ்களை பெற்றுக்கொண்டவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்ததுடன் கற்கைநெறியை மேற்கொள்ளவுள்ளவர்களுக்கான மேலும் சில பாடவிதானங்களை பாடநெறி அலகிற்குள் உள்ளடக்குவதற்கு ஆலோசனைகளை தெரிவித்தார்.
தொடர்ந்து உரையாற்றிய கௌரவ ஆளுநர் அவர்கள் குறித்த ஒரு நிறுவனத்தின் சிறப்பான செயற்பாட்டிற்கு சரியான மனிதவளம் மற்றும் அதன் சிறப்பான முகாமைத்துவம் என்பன மிக இன்றியமையாதவை எனவும், அந்த வகையில் இப்பயிற்சி நெறிக்காக பெருமளவு பணம் மாகாண சபையினால் செலவிடப்பட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது. எனவே பயிற்சியை முடித்து சான்றிதழ் பெறுவதோடு மட்டுமன்றி பயிற்சியை பூர்த்தி செய்தவர்கள் அத்திறன்களை தமது கடமைகளில் பயன்படுத்துவதை உரிய திணைக்கள தலைவர்கள் உறுதி செய்ய வேண்டுமென தெரிவித்தார்.
மேலும் அனைத்து திணைக்களங்களும் பெறுகைகள் மற்றும் முகாமைத்துவம் இரண்டையும் ஒரே சீராக கொண்டுசெல்ல வேண்டுமெனவும், நவீன முறையிலான வாகன கொள்வனவு மற்றும் வாடகை கொள்வனவு முறைகள் உலகளாவிய மாற்றத்திற்கேற்ப புதிய தொழில்நுட்ப அறிவு என்பவற்றை புதிய பயிற்சியாளர்களுக்கான கற்கை அலகினுள் உள்ளடக்க ஆலோசனை வழங்கினார்.
தற்கால covid-19 தொற்றிடர் சூழ்நிலையில் சில அபிவிருத்தி அடைந்த நாடுகள் Digital Transformation System ஊடாக ஊழியர்கள் வீட்டில் இருந்தே கடமையாற்றக்கூடிய வகையில் ஏற்பாடுகள் மேற்கொண்டுள்ளன. அதே போன்ற புதிய Digital Transformation முறையை எமது இளம் சமுதாயமும் கற்றுக்கொள்வதற்கான வழிவகைகள் இப்பயிற்சி நெறிகள் மூலம் எதிர்காலத்தில் வழங்கப்பட வேண்டுமென்ற தனது எதிர்பார்ப்பையும் தெரியப்படுத்தினார்.
குறித்த நிகழ்வில் பிரதம செயலாளர், பிரதி பிரதம செயலாளர்(பயிற்சி) அமைச்சின் செயலாளர்கள்,கற்கைநெறி ஒருங்கிணைப்பாளர், கற்கைநெறி வளவாளர்கள் மற்றும் அடுத்த அணியில் கற்கை நெறியை தொடரவுள்ளவர்கள் என பல தரப்பினரும் கலந்துகொண்டனர்.