மாங்குளம் முதலீட்டு வலயத்தை விவசாய முதலீட்டு வலயமாக ஐ.நா.வின் தொழில் மேம்பாட்டு நிறுவனத்தின் (யுனிடோ) உதவியுடன் கட்டியெழுப்புவது தொடர்பான உயர்மட்டக் கலந்துரையாடல் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன், பெருந்தோட்ட கைத்தொழில் மற்றும் சமூக உட்கட்டமைப்பு கௌரவ அமைச்சர் சமந்த வித்யாரத்ன, கடற்றொழில் நீரியல் மற்றும் கடல்வளங்கள் கௌரவ அமைச்சர் இ.சந்திரசேகர் ஆகியோரின் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று வியாழக்கிழமை மாலை (31.07.2025) நடைபெற்றது.
இந்தக் கலந்துரையாடலின் ஆரம்பத்தில் அனைவரையும் வரவேற்ற ஆளுநர் தனது உரையில், வடக்கு மாகாணத்தை – வன்னிப் பிராந்தியத்தை ஒரு துடிப்பான உற்பத்தி மற்றும் பெறுமதிசேர் மையமாக புத்துயிர் பெறச் செய்வதே எங்களுடைய நோக்கம்.
வடக்கில் இலங்கை முதலீட்டு சபையால் 3 முதலீட்டு வலயங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. அதில் மாங்குளம் முதலீட்டு வலயத்தை விவசாய முதலீட்டு வலயமாக கட்டியெழுப்புவதன் ஊடாக நிலையான வளர்ச்சி, வேலைவாய்ப்பு மற்றும் பிராந்திய செழிப்பையும் ஏற்படுத்த முடியும்.
இந்த முதலீட்டு வலயம் கணிசமான நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பை உருவாக்கும். விவசாயம் மற்றும் கடற்றொழில் சார்ந்த பெறுமதிசேர் உற்பத்திகளை ஊக்குவிப்பதன் மூலமும், சுற்றுச்சூழல் நட்பு முதலீட்டை ஈர்ப்பதன் மூலமும், இந்த முதலீட்டு வலயம் தேசிய பொருளாதாரத்துக்கு வடக்கின் பங்களிப்பை உயர்த்தும்.
முதல் கட்டத்தைத் தொடங்கவும், அமைச்சகங்களுக்கிடையில் ஒருங்கிணைக்கவும், விவசாய உற்பத்திகளை பதப்படுத்துதல் மற்றும் பெறுமதிசேர் உற்பத்திகளாக மாற்றும் கொள்கைகளை நடைமுறைப்படுத்தவும் உதவிகளை மேற்கொள்ளுமாறு பெருந்தோட்ட கைத்தொழில் மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சரைக் கேட்டுக்கொள்கின்றேன்.
உட்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் பொருத்தமான உள்ளூர் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு மாங்குளத்தை மேம்படுத்துவதற்கான தொடர்ச்சியான ஆதரவை இலங்கை முதலீட்டுச் சபையிடம் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.
தொழில்துறை திறன் மேம்பாடு, உணவு பாதுகாப்பு தரநிலைகள் மற்றும் நிலையான உற்பத்தியில் யுனிடோவின் வழிகாட்டுதல் மிகவும் முக்கியமானது, அதேபோல் நிறுவனங்களை உலகளாவிய மதிப்புச் சங்கிலிகளுடன் இணைப்பதில் ஆதரவும் முக்கியமானது.
இந்தத் திட்டம் வெறும் ஒரு தொழில்துறை முதலீட்டு வலயம் அல்ல – இது வடக்குக்கான மீள்தன்மை, நம்பிக்கை மற்றும் புதுப்பித்தலின் சின்னமாகும். ஒன்றாக, இந்த தொலைநோக்கை நடைமுறையில் கொண்டுவருவதற்கு ஒன்றிணைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.
வடக்கு மாகாணத்தின் விவசாயம், கடற்றொழில், கால்நடை உற்பத்திப் பொருட்கள் மூலப்பொருட்களாகவே வடக்கிலிருந்து கொண்டு செல்லப்படுகின்றன. இதனால் வருமான இழப்பு ஏற்படுகின்றது. அத்துடன் சில காலங்களில் அதிகளவு உற்பத்திகளால் அவற்றின் விலையும் வீழ்ச்சியடைகின்றன. எனவே விலைத்தளம்பல் இல்லாமல், விவசாயிகள், மீனவர்கள், கால்நடை உற்பத்தியாளர்களை தொடர்ந்தும் தொழில் முயற்சிகளை ஊக்குவிப்பதற்கு மாங்குளம் முதலீட்டு வலயத்தை பெறுமதிசேர் உற்பத்தி பொருட்களுக்கான வலயமாக உருவாக்குவது பொருத்தமாக அமையும், என ஆளுநர் தனது உரையில் குறிப்பிட்டார்.
ஆளுநரைத் தொடர்ந்து உரையாற்றிய பெருந்தோட்ட கைத்தொழில் மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர், வடக்கு மாகாணத்தில் உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ள தென்னை முக்கோண வலயம் தொடர்பாகவும், பனை தொழிற்துறை தொடர்பாகவும் கருத்துத் தெரிவித்தார். அதனை வளப்படுத்தி உற்பத்திகளை அதிகரிப்பது மாங்குளம் முதலீட்டு வலயத்துக்கு உதவியாக அமையும் எனவும் குறிப்பிட்டார்.
அதன் பின்னர் யுனிடோ நிறுவனத்தின் இலங்கைக்கான பிரதிநிதியால், மாங்குளம் முதலீட்டு வலயத்தை எப்படி மேம்படுத்துவது என்பது தொடர்பான தமது விளக்கங்களையும், ஏனைய நாடுகளில் யுனிடோ எவ்வாறு இவ்வாறான விடயங்களை செயற்படுத்தியுள்ளது என்பது தொடர்பாகவும் தெளிவுபடுத்தப்பட்டது.
இதேவேளை, மாங்குளத்தில் அடையாளப்படுத்தப்பட்டுள்ள காணி வனவளத் திணைக்களத்தின் ஆளுகைக்குள் இருப்பதால் அதனைப் பெற்றுக்கொள்வதற்காக எடுக்கப்படும் முயற்சிகள் தொடர்பாகவும் இலங்கை முதலீட்டுச் சபையின் தலைவரால் தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கான அனைத்துதுறைசார் தரப்புக்களையும் உள்ளடக்கிய உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டதுடன் தொடர் கலந்துரையாடல்கள் ஊடாக விரைவாக இதனை நிறைவு செய்யவும் தீர்மானிக்கப்பட்டது.
இந்தக் கலந்துரையாடலில், பெருந்தோட்ட கைத்தொழில் மற்றும் சமூக உட்கட்டமைப்பு கௌரவ அமைச்சர் சமந்த வித்யாரத்ன, கடற்றொழில் நீரியல் மற்றும் கடல்வளங்கள் கௌரவ அமைச்சர் இ.சந்திரசேகர், கௌரவ பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், சி.சிறீபவானந்தராஜா, பெருந்தோட்ட கைத்தொழில் மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சின் செயலர் பிரபாத் சந்திரகீர்த்தி, வடக்கு மாகாண பிரதம செயலர் திருமதி தனுஜா முருகேசன் உள்ளிட்ட பல்வேறு திணைக்களங்களின் பிரதிநிதிகளும் ஐ.நா.வின் தொழில் மேம்பாட்டு நிறுவனத்தின் (யுனிடோ) பிரதிநிதிகளும் இதில் பங்கேற்றனர்.