மாங்குளம் நகரில் அமைக்கப்பட்டுள்ள மத்திய பேருந்து நிலையத்தை செயற்படுத்துவது தொடர்பில் ஆராயும் களப்பயணமும் கலந்துரையாடலும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் இன்று புதன்கிழமை (24.09.2025) நடைபெற்றது.
மத்திய பேருந்து நிலையத்தை ஆளுநர் மற்றும் அதிகாரிகள் குழுவினர் பார்வையிட்டனர். மத்திய பேருந்து நிலையத்துக்கு பேருந்துகள் வந்து செல்வதற்கான ஒழுங்குகள் எவ்வாறு மேற்கொள்ளப்பட வேண்டும் என ஆராயப்பட்டது. அதற்கான சாத்தியமான வழிகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.
தொடர்ந்து மாங்குளத்திலுள்ள வடக்கு மாகாண நீர்பாசனத் திணைக்களத்தின் தலைமை அலுவலக கேட்போர் கூடத்தில் கலந்துரையாடல் நடத்தப்பட்டது.
மாங்குளம் வளர்ந்து வரும் நகரம் என்ற அடிப்படையிலும், எதிர்வரும் காலங்களில் அந்தப் பகுதியில் முதலீட்டு வலயம் அமையவுள்ளது என்பதையும் கருத்திலெடுத்து மாங்குளம் நகரத்துக்கான நகர அபிவிருத்தி அதிகார சபையின் திட்ட வரைவைப் பெற்றுக்கொள்ளுமாறு ஆளுநர் அறிவுறுத்தினார்.
தூய்மை இலங்கை செயற்றிட்டத்தின் கீழ் மாங்குளம் மத்திய பேருந்து நிலையத்தை உள்வாங்குமாறு ஏற்கனவே கடிதம் அனுப்பப்பட்டுள்ள நிலையில் விரைவாக அதனை உள்வாங்கச் செய்வதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் ஆளுநர் ஆலோசனை வழங்கினார். அத்துடன் மழை காலங்களில் மாங்குளம் மத்திய பேருந்து நிலையத்தில் வெள்ளம் தேங்குவதால் வழிந்தோடுவதற்கான வாய்க்கால் அமைப்பு பணிகளையும் விரைவுபடுத்துமாறு ஆளுநர் பணிப்புரை விடுத்தார்.
மேலும், மாங்குளம் மத்திய பேருந்து நிலையத்துக்கு பேருந்துகள் வந்து செல்வதற்கான பாதைகளை அமைப்பது தொடர்பில் வீதி அபிவிருத்தி அதிகார சபையுடன் கலந்துரையாடப்பட்டது. இதன்போது புகையிரதத் திணைக்களத்தின் ஒதுக்கக் காணிகளும் அந்தப் பகுதியில் இருப்பதால் அவர்களுடன் கலந்துரையாடி பொருத்தமான இடத்தில் வீதியை அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது. அத்துடன் முதல் கட்டமாக ஏ – 9 வீதியுடனான வீதியை அகலித்து புனரமைத்து பேருந்து நிலையத்தை இயங்கச் செய்வதற்கு முடிவு செய்யப்பட்டது. பேருந்து நிலையத்துக்கும் ஏ – 9 வீதிக்கும் இடைப்பட்ட பகுதியிலுள்ள கடைகளை அகற்றும் நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளமையும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.
தூய்மை இலங்கை செயற்றிட்டத்தின் ஊடாக மேற்கொள்ளக் கூடிய நடவடிக்கைகளை அதன் ஊடாகச் செய்வதற்கும் ஏனைய உட்கட்டுமானத் தேவைகளுக்குரிய நிதியை மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை நிதியிலிருந்து வழங்குவதற்கும் கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டது.
இந்தக் கலந்துரையாடலில் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் தவிசாளர், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், முல்லைத்தீவு மாவட்டச் செயலர், வடக்கு மாகாண காணி ஆணையாளர், ஒட்டுசுட்டான் பிரதேச செயலர், முல்லைத்தீவு மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர், புதுக்குடியிருப்பு பிரதேச சபைச் செயலாளர், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மாவட்ட பொறியியலாளர், வட இலங்கை தனியார் போக்குவரத்துச் சங்கத்தின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.